கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சியில் மக்களின் குடிநீர் தேவைக்காக கட்டளை காவிரி ஆற்றில் ரூ.30 இலட்சத்தில் புதிய கிணறு ஒரு மாதத்திற்கு கட்டிமுடிக்கப்படும் என்று இந்த கிணற்றின் பூமி பூசையில் கலந்து கொண்ட கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதா தெரிவித்தார்.
புலியூர் பேரூராட்சியில் 12 ஆயிரத்து 720 பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் பருவமழை பொய்த்துப் போனதால், கரூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து மக்களுக்கு போதிய குடிநீர் வழங்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன்படி, புலியூர் பேரூராட்சி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கும் வகையில், கட்டளை பகுதி காவிரி ஆற்றில் ரூ.30 இலட்சத்தில் புதிய கிணறு அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூசையை சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கீதா தொடங்கி வைத்தார்.
பூமி பூசை முடிந்த பின்பு அவர் கூறியது:
“நாளொன்றுக்கு 18 இலட்சம் லிட்டர் தண்ணீர் இந்த கிணறு மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. கிணறுவெட்டும் பணி ஒரு மாதத்திற்குள் முடிவடையும்” என்றுத் தெரிவித்தார்.
பின்னர், அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த அவர், குடிநீர் கோரி ஆட்சியரிடம் மனு அளித்திருந்த சேங்கல் ஊராட்சி மற்றும் பம்பரமுத்தம்பட்டி பகுதிக்குச் சென்று அப்பகுதி மக்களிடம் குடிநீர் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து, தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பழுதாகியுள்ள ஆழ்குழாய் கிணறுகளை சீரமைத்து பொதுமக்களுக்கு உடனே குடிநீர் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த பூமி பூசை நிகழ்ச்சியில், புலியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
