விபத்தில் பாதிக்கப்பட்ட அரசு ஊழியருக்கு மருத்துவச் செலவை இழப்பீட்டுத் தொகையுடன் வழங்க திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகர், கங்கா பெளண்டரியைச் சேர்ந்தவர் பெ.ராமகிருஷ்ணன். இவர் தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணி நூல் துறையில், கைத்தறி அலுவலராக அருப்புக்கோட்டையில் பணிபுரிந்து வந்தார். பணியில் இருக்கும் போது ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருந்தார்.

இந்நிலையில், 27.9.2010-ஆம் தேதி அலுவலகத்திற்குச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் எலும்பு முறிவு, தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு ரூ.1.20 இலட்சம் செலவாகியுள்ளது.

இந்த தொகை முழுவதையும் காப்பீட்டு நிறுவனம் வழங்க வில்லை. இதனையடுத்து திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் இராமகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார். அதேபோல், மருத்துவமனை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி வ.பாலசுந்தரகுமார், உறுப்பினர்கள் ச.சங்கர், ச.கற்பகச்செல்வி ஆகியோர் “இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வழிகாட்டுதல் உத்தரவுப்படி ரூ.2 இலட்சம் வரை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பலன், காப்பீடு செய்தவருக்கு கிடைக்கத்தக்கதாகும்.

அரசு ஆணைப்படி அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சைக்கு மருத்துவ காப்பீட்டு நிறுவனம் சிகிச்சைக் கட்டணத்தை வழங்க வேண்டும்.

இராமகிருஷ்ணன், 2-ஆம் கட்டமாக 9.10.2010 முதல் 15.10.2010 வரை பிசியோதெரபி மற்றும் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்த சிகிச்சைகள் அரசு ஆணையில் இடம் பெறவில்லை. 24.7.2011 முதல் 4.8.2011 வரை பெற்ற 3-ஆம் கட்ட பிசியோதெரபி மற்றும் சர்க்கரை நோய்க்கு மேற்கொண்டுள்ள சிகிச்சை அரசு ஆணையில் இடம் பெற்றுள்ளது. இதற்கான செலவுத் தொகை ரூ.65470 இராமகிருஷ்ணனுக்கு கிடைக்கத்தக்கது.

இந்தத் தொகையை மருத்துவமனையோ, இன்சூரன்ஸ் நிறுவனமோ கூட்டாகவோ, தனித்தனியாகவோ உத்தரவு பிறப்பித்த ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும்.

தவறும்பட்சத்தில் வழக்கு தாக்கல் செய்த தேதியில் இருந்து தொகை வசூலாகும் தேதி வரை 6 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும்.

மேலும், இராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மனஉளைச்சல் மற்றும் மனகஷ்டத்திற்கு நஷ்டஈடாக ரூ.10 ஆயிரம் மற்றும் செலவுத் தொகை ரூ.3 ஆயிரத்தை இன்சூரன்ஸ் நிறுவனம் உத்தரவு பிறப்பித்த ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கப்பட்டது.