Rs 1.10 lakh unaccounted money seized from Vellore corporation commissioners Kubendran office

வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.1.39 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

வேலூர் மாநகராட்சி ஆணையராக பணிபுரிந்து வந்தவர் குமார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் ஒப்பந்ததாரர் பாலாஜி என்பவரிடம் சுகாதாரப்பணிகளில் பில் பாஸ் செய்து காசோலை வழங்க லஞ்சம் கேட்டுள்ளார். 

அப்போது பணம் வாங்கும்போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் பிடிபட்டார். 

இதையடுத்து வேலூர் மாநகராட்சி ஆணையராக நகராட்சிகளின் மண்டல இயக்குனராக இருந்த குபேந்திரன் தேர்வு செய்யப்பட்டார். 

இந்நிலையில், மாநகராட்சி ஆணையர் குபேந்திரன் அனைத்து பணிகளுக்கும் 2 சதவிகிதம் லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. 

இதைதொடர்ந்து இன்று காலை 10 மணியளவில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் திடீரென வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர். 

இதில், மாநகராட்சி ஆணையரின் டிராயரில் இருந்து ரூ. 1.10 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்தனர். 

மேலும் அந்த அலுவலகத்தில் பணிபுரியும் மல்லிகா என்பவரிடம் இருந்து 20 ஆயிரம் ரூபாயும் பங்காரம்மா என்பவரிடம் இருந்து 9 ஆயிரத்து 500 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி ஆணையர் குபேந்திரன் பணம் எப்படி வந்தது என்பது தெரியாது என கூறியுள்ளதாகவும் அவர்கள் மீது தகுந்த வழக்கு பதியப்படும் எனவும் தெரிவித்தனர்.