Rs 10 lakhs robbery in bank
சக ஊழியரின் பிரிவு உபசார விழாவில் ஊழியர்கள் கலந்து கொண்டபோது, வங்கி கேஷியர் அறையில் இருந்து 10 லட்சம் ரூபாய் திருட்டுப்போன சம்பவம் மதுரையில் நடந்துள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை, விளக்குத்தூண் அருகில் இந்தியன் வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கி கிளையின் காசாளராக சக்தி கணேஷ் இருந்து வருகிறார். வங்கியில் பணியாற்றி வந்த சக ஊழியர் ஒருவருக்கு பிரிவு உபசார விழா நடந்துள்ளது.
வங்கியின் மேல் மாடியில் விழா நடந்துள்ளது. விழாவில் வங்கி கிளை மேலாளர் சீனிவாசன், கேஷியர் சக்தி கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சக்தி கணேஷ், விழாவில் பங்கேற்கும் முன் தனது அறையில் 10 லட்சம் ரூபாயை வைத்து விட்டு சென்றள்ளார்.
அப்போது, வாடிக்கையாளர் என்ற போர்வையில் கொள்ளையன் ஒருவன் நீண்ட நேரமாக வங்கியில் இருந்துள்ளான். இந்த நிலையில் வங்கி ஊழியர்கள் அனைவரும் மேல் மாடிக்கு சென்றனர்.
இதனைச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அந்த கொள்ளையன், கேஷியர் அறைக்குச் சென்று அங்கிருந்து 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்று விட்டான்.
விழா முடிந்து தனது அறைக்கு திரும்பிய சக்தி கணேஷ், பணம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த கொள்ளை குறித்து வங்கி மேலாளர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பணம் திருட்டு போனதில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு உள்ளதா? பணம் எப்படி மாயமானது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் வங்கியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைக் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
