royal salute for periyapandiyan earned great reputation.
ராஜஸ்தான் இதுவரைக்கும் நமக்கெல்லாம் பாலை வன பிரதேசமாக மட்டுமே அறிமுகமாகி இருந்தது! ஆனால் இன்ஸ்பெக்டர் பெரிய பாண்டியன் அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, அது கொலைவன பிரதேசமாகவும் அறியப்படுகிறது.
சம்பவம் நிகழ்ந்த ராஜஸ்தானின் பாலி மாவட்டமானது படு பயங்கர கொள்ளையர்கள் உள்ள பகுதியாம். கத்தி கபடாவில் ஆரம்பித்து துப்பாக்கி வரை சர்வ சாதாரணமாக புழங்கும் ஏரியாவாம் அங்கேயிருக்கும் போலீஸாரே அந்த ஏரியாவுக்கு செல்ல அஞ்சும் நிலையில் பெரிய பாண்டியன் இப்படியொரு சின்ன டீமுடன் சென்றது பெரிய ஆபத்தான முயற்சிதான் என்கிறார்கள்.
ஆனால் இந்த சர்ச்சையையெல்லாம் தாண்டி வீரமரணம் அடைந்த பெரிய பாண்டியன் அடிப்படையிலேயே ஒரு அருமையான மனிதராக இருந்திருக்கிறார் என்பது இப்போது புரிகிறது. பணியில் வீரம், தனி மனுஷனாக ஈரம் இவைதான் பெரியபாண்டியனின் அடையாளம் என்கிறார்கள்.
பெரிய பாண்டியன் விஷயத்தில் சில ஹைலைட் விஷயங்கள் இதோ:
* ’எங்களைப் பிடிக்க வந்தால் கொல்வோம்’ என்று நாதுராம் டீம் என்று மிரட்டல் போன் செய்த பின்னரும் தீரமாக கிளம்பிச் சென்றது தமிழக போலீஸ் டீம். டீமுக்கு தலைமையேற்றது கொளத்தூர் இன்ஸ்பெக்டர் முனிசேகர். ஆனால் உடன் சென்ற மதுரவாயல் இன்ஸ்பெக்டரான பெரிய பாண்டியன்தான் துறுதுறுவென முன் நின்றிருக்கிறார்.
* தகவல் லீக் ஆகிவிடும் எனும் சந்தேகத்தில் லோக்கல் ஸ்டேஷனான ஜெய்த்ரான் போலீஸ் நிலையத்துக்கு தகவலே தெரிவிக்காமல் நுழைந்திருக்கிறார்கள்.
* நிலம் வாங்க வந்த ரியல் எஸ்டேட் நபர்கள் போல் மாறுவேடத்தில் கால் டாக்ஸி எடுத்து சுற்றியிருக்கின்றனர்.
* ராம்பூர்கலா கிராமத்தில் ஒரு செங்கல் சூளையில் நாதுராம் தனது நண்பர்களோடு பதுங்கியிருக்கிறான் என்று தகவல் கிடைத்திருக்கிறது.
* அதிகாலை 2:30 மணிக்கு தமிழக போலீஸ் டீம் செங்கல் சூளையை முற்றுகையிட்டிருக்கிறது. புதர் மண்டிய அந்த இடத்தில் மற்றவர்களை பின்னே வரச்சொல்லிவிட்டு முதல் ஆளாக பெரிய பாண்டியன் நுழைந்திருக்கிறார்.
* நாதுராமோடு அவனது உறவுக்கூட்டமே கூடிக் கிடந்திருக்கிறது அங்கே அவர்கள் கையில் கிடைத்த செங்கற்களை எடுத்து சரமாரியாய் பெரியபாண்டியனை தாக்கியுள்ளனர். சரிந்து விழுந்த அவரின் துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டிருக்கின்றனர். அவரை மீட்கச் சென்ற இன்ஸ்பெக்டர் முனிசேகரையும் கடுமையாய் தாக்கிதப்பித்திருக்கிறார்கள்.
* பெரிய பாண்டியனுக்கு இரண்டு மகன்கள். ரூபன், ராகுல்.
* தனது பசங்களோடு சேர்ந்து போட்டோ கூட எடுத்ததில்லையாம். டூட்டி, டூட்டி என்றே கிடந்தவர், இப்படி டூட்டியிலேயே மரித்துவிட்டார்.
* சென்னை புறநகரில் சொகுசு கார்கள் திருடு போன வழக்கை திறம்பட விசாரித்து, புலனாய்ந்து அவற்றை மீட்டவர்.
* மற்றொரு சொகுசுக்கார்கள் திருட்டு வழக்கிற்காக, மதுரையில் ஒரு மாதம் மாறுவேடத்தில் அலைந்து கொள்ளையர்களை மடக்கியவர்.
* கிரைம் வழக்கு விசாரணையில் ஒரு புலனாய்வுப் புலிதான் பெரியபாண்டியன் என்று புகழ்கிறது காவல்துறை
* நெல்லைமாவட்டம் மூவிருந்தாளி சாலைப்புதூர் கிராமம்தான் பெரிய பாண்டியனின் சொந்த ஊர். அங்கு அவர் இலவசமாய் கொடுத்த பதினைந்து செண்ட் நிலத்தில்தான் அரசுப்பள்ளிக்கூடம் கட்டப்பட்டுள்ளதாம்.
போலீஸென்றால் ‘எடுத்துப் பழக்கப்பட்டவர்கள்’ என்று பெயரெடுத்திருக்கும் நிலையில் ‘கொடுத்துப் புகழ்பெற்ற’ பெரியபாண்டியனுக்கு அடிக்கலாம் ஒரு ராயல் சல்யூட்.
