சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவியை, போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர்.

சென்னை வியாசார்பாடியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி கல்வெட்டு ரவி (45). இவர் மீது, ஐந்து கொலை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் உள்ளன. 

கல்வெட்டு ரவி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட ரவி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமினில் வெளியேவந்த கல்வெட்டு ரவி தலைமறைவானார்.

இந்த நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து கல்வெட்டு ரவியை தேடி வந்தனர். கல்வெட்டு ரவி, ஆந்திராவில் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்றிரவு தனிப்படை போலீசார் ஆந்திரா சென்றனர். அப்போது, ரவி பதுங்கியிருந்த இடத்தை போலீசார் சுற்றி வளைத்தனர்.

அப்போது, போலீசாருக்கும், ரவிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ரவியை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, துப்பாக்கி முனையில் ரவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

ரவி கைது செய்யப்பட்டது குறித்து அவரின் அம்மா நாகபூஷணம் கூறுகையில், என் மகன் ரவி, ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ளான்.


அவனை போலீசார் ரகசியமாக வைத்துள்ளனர். ரவியை என்கவுண்டர் செய்யப்போவதாக போலீசார் கூறுகின்றனர். இதனால் எனக்கு பயமாக உள்ளது என்றும் ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.