சென்னை டிபி சத்திரத்தில் ரவுடி ஒருவர் 3 பேர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவர் உடன் இருந்தவருக்கும் வெட்டு விழுந்ததில் அவர் ஆபத்தானா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஷெனாய் நகர் , ஜோதி அம்மாள் நகரில் வசித்தவர் முருகன் (எ) தீச்சட்டி முருகன் (34). இவர் மீது டி.பி.சத்திரம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் நேற்றிரவு 10 மணி அளவில் டி.பி.சத்திரம் பிரதான சாலையில் பாண்டியன் மளிகை கடை வைத்துள்ள தனது நண்பர் நாராயணன் என்பவருடன் கடைக்குள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் மர்ம கும்பல் மளிகைகாடைக்குள் புகுந்து தீச்சட்டி முருகனையும் மளிகை கடை உரிமையாளர் நாராயணனையும் சரமாரியாக வெட்டியது. இதில் தப்பிக்க வழியில்லாமல் பலத்த அரிவாள் வெட்டு காரணமாக மளிகைகடைக்குள்ளேயே தீச்சட்டி முருகன் உயிரிழந்தார்.
கடை உரிமையாளர் நாராயணனுக்கும் வெட்டுக்கள் விழுந்ததில் அவரும் ரத்த வெள்ளத்தில் கடைக்குள்ளே விழுந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கம் பொதுமக்கள் ஓடிவருவதை பார்த்து அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பித்து சென்றது.
உடனடியாக அங்குள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த டி.பி.சத்திரம் போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த கடை உரிமையாளர் நாராயணனை மீட்டு ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தீச்சட்டி முருகன் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. நாராயணன் அளிக்கும் வாக்குமூலத்தில் தான் யார் வந்து வெட்டியது என்பது தெரிய வரும்.
