கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் மோட்டார்சைக்கிளில் சென்ற பிரபல ரௌடி நடுரோட்டில் ஓடஓட வெட்டிக் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். உடன் சென்ற நண்பர்களையும் அரிவாளால் வெட்டிவிட்டு கொலையாளிகளை தப்பியோடினர். 

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே உள்ள ஒட்டர்பாளையத்தைச் சேர்ந்தவர் சின்ன தாசப்பா. இவரது மகன் வெங்கட்ராஜ் (30). இவர் பிரபல ரௌடி. 

நேற்று இரவு 8 மணி அளவில் கிருஷ்ணகிரி - ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் காமன்தொட்டி அருகில் பாத்தகோட்டா பிரிவு சாலை பக்கமாக தனது நண்பர்கள் மாதேஸ், நாகேஷ் ஆகிய இருவருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் வெங்கட்ராஜ்.

அந்நேரம் இவரை பின்தொடர்ந்து காரில் வந்தவர்கள் மோட்டார் சைக்கிள் மீது காரை மோதினர். இதில் மோட்டார்சைக்கிளில் சென்ற வெங்கட்ராஜ் நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது காரில் இருந்து படபடவென இறங்கிய ஆறு பேர் கொண்ட கும்பல், தாங்கள் கையில் வைத்திருந்த வீச்சரிவாளால் வெங்கட்ராஜை வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வெங்கட்ராஜ் முயன்றார்.

ஆனாலும், அந்த கும்பல் வெங்கட்ராஜை விடாமல் விரட்டி சென்று நடுரோட்டில் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டியது. இதில் வெங்கட்ராஜூக்கு தலை, கை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டு காயம் விழுந்தது. இதில் தலை சிதைந்து வெங்கட்ராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதனைப் பார்த்த வெங்கட்ராஜின் நண்பர்கள் இருவரும் தப்பி ஓட முயன்றனர். அவர்கள் இருவரையும் கொலையாளிகள் சரமாரியாக சுற்றி வளைத்து வெட்டினார்கள். இதில் நாகேஷ் வெட்டு காயங்களுடன் தப்பி ஓடி விட்டார். மாதேஸின் கதி என்ன? என்று தெரியவில்லை.

இந்த நிலையில் இந்த கொலையை நேரில் பார்த்த மக்கள் சிலர் அந்த கும்பலை விரட்டி பிடிக்க முயன்றனர். அந்த நேரம் கொலையாளிகள் தாங்கள் வந்த காரை நடுரோட்டில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இந்த கொலை குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் துணை காவல் கண்காணிப்பாளர் விஜய் கார்த்திக் ராஜ், சூளகிரி காவல் ஆய்வாளர் முருகன் மற்றும் காவலாளர்கள் அங்கு சென்றனர். அவர்கள் கொலையுண்ட வெங்கட்ராஜின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக  ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், வெங்கட்ராஜூடன் வெட்டு காயம் அடைந்த நண்பர் மாதேஸ் உயிருடன் இருக்கிறாரா? அல்லது அவரும் கொலை செய்யப்பட்டாரா? என காவலாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.