Rowdy Binu affair Larry shed owner Velu Surrender
ரவுடிகள் பிறந்தநாள் கொண்டாடிய லாரி ஷெட் உரிமையாளர் வேலு, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்தார். பினுவுடன் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்த நிலையில், வேலு இன்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

சென்னை பள்ளிக்கரணை பகுதியில், கடந்த 6 ஆம் தேதி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ரவுடி பல்லு மதன் என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் பிரபல ரௌடி பினுவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளச் செல்வது தெரியவந்ததது. அந்த பிறந்த நாள் விழாவில் செள்ளையில் உள்ள அத்தனை ரவுடிகளும் கலந்து கொள்ள உள்ளதும் போலீசாருக்கு தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த காவல் ஆணையர், அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து, பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரௌடிகளை கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து சர்வேஸ்ராஜ் தலைமையில் உதவி காவல் ஆணையர்கள் கண்ணன், நந்தகுமார் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் உள்பட 50 போலீஸார் செவ்வாய்க்கிழமை இரவு ரௌடிகளை சுற்றி வளைத்துப் பிடித்தனர்.
இதில் ஒரு சிலர் தப்பியோடி வடக்கு மலையம்பாக்கம் ஊருக்குள் தலைமறைவாயினர்.
இந்த அதிரடி வேட்டையில் முக்கிய ரவுடிகளான பினு, அவரது கூட்டாளிகள் கனகு (எ) கனகராஜ், விக்கி (எ) விக்னேஷ் ஆகிய 3 பேரும் தலைமறைவாயினர். இருப்பினும், பினுவின் ஆதரவாளர்களான சிலர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து பினுவை உயிருடனோ அல்லது பிணமாகவோ பிடிக்க உத்தரவிடப்பட்டது. இதனால் பயந்து போன பினுஇன்று காலை அம்பத்தூர் காவல் துணை ஆணையர் சர்வேஸ்ராஜ் முன்பு சரணடைந்தார். பினு மீது 3 கொலை வழக்குகளும் ஏராளமான கொலை முயற்சி வழக்குகளும், வழிப்பறி வழக்குகளும் உள்ளன.
இந்த நிலையில் பினு போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் 50 வது பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என என் தம்பி வற்புறுத்தினார். திருந்தி வாழ ஆசைப்பட்டு 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தேன்.

நான் நீங்கள் நினைக்கிற மாதிரியெல்லாம் அவ்வளவு பெரிய ரவுடி கிடையாது. சூளைமேட்டில் பிறந்து வளர்ந்தவன் நான். நிறைய சிறைவாசம் அனுபவித்தவன். நான் கரூரில் தலைமறைவாக இருந்தது என் தம்பிக்கு மட்டுமே தெரியும். என்னை மன்னித்து விடுங்கள் என போலீசாரிடம் பினு கெஞ்சியுள்ளார்.
ரவுடி பினுவுடன் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில், பினு பிறந்த நாள் கொண்டாட்டம், நடைபெற்ற லாரி ஷெட் உரிமையாளரான வேலு, நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர் வேலு சரணடைந்துள்ளார்.
