காவேரிப்பட்டிணம் அருகே, நடுக்கல்லில் வரையப்பட்ட பாறை ஓவியம் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. இது 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என தெரியவந்துள்ளது.

காவேரிப்பட்டணம் அருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய அரிய பாறை ஓவியம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது என கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

இதுகுறித்து கோவிந்தராஜ் தெரிவித்ததாவது:

“இறந்தவரின் நினைவாக நடப்படும் நடுகல்லில் இறந்தவர்களின் பெயர், அவரது சிறப்புகள் எழுதப்பட்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

எழுத்துகள் தோற்றம் பெறாத வரலாற்றுக்கும் முற்பட்ட இரும்பு காலத்தில் இறந்தவரின் உருவத்தை வரைந்துள்ளதை தட்டக்கல்லில் உள்ள கானப்பாறை எனுமிடத்தில் இருப்பதை அந்த ஊரைச் சேர்ந்த மாணிக்கம், காளியம்மாள் ஆகியோர் அளித்த தகவல் அளித்தனர்.

அதன்பேரில் கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் கோவிந்தராஜ் கண்டறிந்தார். அப்போது அருங்காட்சியகப் பணியாளர்கள் கிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

காவேரிப்பட்டணத்தில் இருந்து நாகரசம்பட்டி செல்லும் சாலையில் கானப்பாறை பகுதியில் பாறை ஒன்றின் கிழக்குப் பக்கத்தில் வெண்மை நிற ஓவியம் உள்ளது. இதில் இறந்தவரின் உருவம் படுத்த நிலையில் வரையப்பட்டு, அவரைச் சுற்றி ஒருவர் இரண்டு கைகளையும் தூக்கி நின்றவாறும், மற்ற 3 பேர் உட்கார்ந்து நிலையிலும் உள்ளவாறும் வரையப்பட்டு உள்ளது.

இந்த ஓவியம் இறந்தவரையும், அவரது உறவினர்களையும் குறிப்பதாக உள்ளது. இறந்தவரை சுற்றி உறவினர்கள் இருந்து இறுதிச் சடங்குகள் செய்யும் இந்தக் கால நடைமுறையின் பழைமையை 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாறை ஓவியம் விளக்குவதாக உள்ளது.

இந்த ஓவியத்தின் எதிரே சாலையின் இடதுபுறம் கல்திட்டை ஒன்றும் உள்ளது. மேலும் இந்தப் பாறையின் அருகில் கருப்பு, சிவப்பு வண்ண பானை ஓடுகள் காணப்படுகின்றன.

இவையாவும் இந்த பாறை ஓவியத்தோடு தொடர்புடைய பெருங்கற்படைக் கலாசாரத்தை வெளிப்படுத்துபவை.

இவ்வாறு இறந்தவரின் உருவம் வரையப்பட்ட ஓவியம், அவரது கல்பதுக்கை, அக்காலத்தைச் சேர்ந்த பானை ஓடுகள் யாவும் ஒரே இடத்தில் காணப்படுவதால் இது அரிய கண்டுபிடிப்பு” என்று அவர் தெரிவித்தார்.