Road Safety Awareness Procession in Krishnagiri

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி கொடியசைத்து தொடக்கி வைத்தார். இந்த விழா வருகிற 29-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், புதிய பேருந்து நிலையத்தில் வட்டார போக்குவரத்துத் துறை சார்பில் 29- வது சாலை பாதுகாப்பு வார விழா வருகிற 29-ஆம் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. 

இதனையொட்டி விழிப்புணர்வு ஊர்வலத்தை தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஷ்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஊத்தங்கரை மனோரஞ்சிதம் நாகராஜ், பர்கூர் சி.வி.ராஜேந்திரன், 

வட்டார போக்குவரத்து அலுவலர்கள் செந்தில்வேலன் (கிருஷ்ணகிரி), அசோகன் (ஓசூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், போக்குவரத்து கழக துணை மேலாளர்கள் மகேந்திரன், குமார், அறிவழகன், 

வாகன ஆய்வாளர்கள் குமார், செந்தில்குமார், நாகராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் தென்னரசு, கிருஷ்ணகிரி முன்னாள் நகராட்சி தலைவர் கே.ஆர்.சி.தங்கமுத்து, நகர அ.தி.மு.க. செயலாளர் கேசவன் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில், "சிக்னல் விளக்குகளை மதித்து செல்ல வேண்டும். 

போக்குவரத்து காவலர்கள் தரும் சிக்னல்களை மதித்து நடக்க வேண்டும். 

வாகனங்களை கவனமாக ஓட்ட வேண்டும். 

கனரக வாகனங்களை சாலையின் இடதுபுறமாக ஓட்ட வேண்டும். 

சாராயம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது. 

அளவுக்கு அதிகமாக ஒலி எழுப்ப கூடாது" போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி மக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வழங்கினார்.

இந்த ஊர்வலம் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி பெங்களூரு சாலை வழியாக புனித அன்னாள் மகளிர் மேல்நிலைப்பள்ளியை வந்தடைந்தது. 

இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு சென்றனர்.