திருச்சி

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் 200 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்கியது. 

இந்த ரத யாத்திரை குழுவினர் கேரள மாநிலம் வழியாக நேற்று தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தனர். 

"ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும், தமிழகத்தில் இந்த யாத்திரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழக சட்ட சபையிலும் இந்த பிரச்சனையை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினர். இதனையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமைச் செயலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.

மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று மதியம் தி.மு.க.வினர் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். 

இந்தப் போராட்டத்திற்கு மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில், "ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எடப்பாடி அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும், 

ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை உடனே விடுதலை செய்யவேண்டும்" என்று வலியுறுத்தினர்

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை காவலாளர்கள் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டுச் சென்றனர்.