தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது லோடு வேன் மோதி விபத்துக்குள்ளானதில் சுஜாதா, சந்திரா, லதா ஆகிய மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.

வண்டலூரில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு பூ ஏற்றிக் கொண்டு, தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் லோடு வேன் ஒன்று சென்றது. இந்த வேனில் 9 பெண்கள் உள்பட 11 பேர் இருந்தனர்.

லோடு வேன், அனகாபுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராவிதமாக, நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. 

இந்த விபத்தில், வேனில் சென்ற ஒரு பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலர் பலத்த காயமடைந்தனர். அவர்கள், குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் 2 பெண்கள் உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.