நாமக்கல்

நதி நீர்ப் பங்கீடு உலக அளவில் சிறப்பாக நடந்து வரும்போது, ஒரு சில மாநிலங்களுக்குள் நடக்காமல் இருப்பது மிகப்பெரிய வேதனை அளிக்கிறது என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், முருகன் கோயில் பேருந்து நிறுத்தம் அருகே சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்ட அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று காலை நடைப்பெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலர் சுரேஷ் காந்தி தலைமை தாங்கினார். அந்தக் கட்சி அலுவலகத்தை சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் திறந்து வைத்தார். 

அப்போது அவர் செய்தியாளர்களிடம், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படுவதற்கு அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், வாரியம் அமைப்பதற்கான எந்த சூழ்நிலையும் உருவாகாமல் இருப்பதால், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்தில் விழிப்புணர்வு பேரணி நடத்துகிறோம். 

மேட்டூரில் இருந்து கரூர், திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை பேரணி நடைபெறுகிறது. பேரணி வெள்ளிக்கிழமை (நேற்று) தொடங்கி ஞாயிற்றுக்கிழமை முடிகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததற்கு கர்நாடக தேர்தல்தான் முக்கிய காரணம். 

நதி நீர்ப் பங்கீடு உலக அளவில் சிறப்பாக நடந்து வரும்போது, ஒரு சில மாநிலங்களுக்குள் நடக்காமல் இருப்பது மிகப்பெரிய வேதனை. மத்திய அரசு மாறி மாறி வந்தாலும், அதனை கவனிக்காமல் இருக்கும் சூழல்தான் உள்ளது. மக்கள் இதற்காகப் போராட வேண்டும்.

ரஜினி மற்றும் கமலிடம் சென்று தமிழக அரசியல் தலைவர்கள் குறித்து கருத்துக் கேளுங்கள், அவர்கள் அதற்கு பதில் சொன்ன பிறகு நாங்கள் கூறுகிறோம் .

பெரியார் சிலைகள் உடைக்கப்படுவது மிக வேதனையான விஷயம், வன்மையாகக் கண்டிக்கிறோம். திடீரென இப்படி நடப்பது பல விதத்தில் சிந்திக்க வைக்கிறது. இதற்கு முன்பு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு தைரியம் இருந்ததில்லை, அதற்கு என்ன காரணம் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ரத யாத்திரை எதற்காகப் புதிதாக வருகிறது என்பது எனக்கு புரியவில்லை, மக்களுக்கு புரிந்தால் சரி" என்று அவர் கூறினார்.