வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ஆறு, குளம் வற்றிய நிலையில் கொளுத்தும் வெயிலில், தாகத்தை தணித்துக் கொள்ள வயல்வெளிகளில் இருக்கும் நீரை குடிக்க நூற்றுக்கனக்கான கொக்குகள் குவிந்தன.

வெயிலூர் என்ற பெயர் தான் காலப்போக்கில் வேலூர் என்று மாறிவிட்டது என்ற பேச்சை வேலூர் பக்கம் நம்மால் கேட்க முடியும்.

வேலூர் மாவட்டத்தில் எப்பவும் வெயில் கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள செயற்கை குளிர் பானங்களான பொவொன்டொ, மிராண்டா, சிலைஸ் போன்ற பானங்களும், இயற்கை பானங்களான இளநீர், முலாம்பழம், மோர், தர்பூசணி சாறு போன்றவற்றையும் சாப்பிட்டு உடல் சூட்டைத் தணித்துக் கொள்கின்ற்னர்.

விலங்குகள் மற்றும் பறவைகள் இந்த கோடை வெயிலை தணிக்க அதற்கு இருக்கும் ஒரே வழி தண்ணீர் மட்டும்தான்.

கோடை வெயிலுக்கு முன்பே ஏரி, குளங்கள், ஆறுகள் என அனைத்தும் வறண்டு கிடக்கிறது. கோடை தொடங்கிய பின்பு, இருந்த சிறிது தண்ணீரும் ஆவியாகிவிட்டது. இதனால், மனிதர்களை விட விலங்குகள், பறவையினங்களுக்கே அவதி அதிகம்.

ஆறு, குளம், ஏரிகளில் தண்ணீர் இல்லாததால் விவசாய நிலங்களில் பயிர்களுக்கு பாய்ச்சப்படும் தண்ணீரை அருந்த பறவைகள் வயல்வெளிகளை படையெடுக்கும்.

அப்படிதான், அம்முண்டி – பூட்டுத்தாக்கு சாலையில் அம்முண்டி அருகே விவசாய நிலத்தில் கரும்புக்கு பாய்ச்சிய நீரை அருந்த நேற்று பகல் 12 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட கொக்குகள் குவிந்து இருந்தன.

வயல்வெளியில் குவிந்திருந்த நூற்றுக்கனக்கான கொக்குகளை பார்த்த அங்கிருந்த மக்கள், பறவைகள் குவிந்திருப்பதற்கு மகிழ்ச்சி அடைவதா? அல்லது தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றதே என்று வருத்தப்படுவதா? என்று மனசோர்வு கொண்டனர்.