அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

அடுத்த 12 மணி நேரத்தில் ஜவாத் புயல் உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருக்கிறது. அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இன்று, புயலாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்த புயலுக்கு ஜவாத் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மற்றும் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. தெற்கு அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிய நிலையில், இது நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது. இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று பின் புயலாக மாறும் எனவும் கூறப்பட்டது. அதன்படி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது இன்று அதிகாலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது தற்போது மேலும் தீவிரமடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று உள்ளது.

இது அடுத்த 12 மணி நேரத்தில் ஜாவத் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் நாளை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிசா அருகே கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளதால் ஒடிசா மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியால், தமிழகத்தில் உள்ள எண்ணூர், கடலூர், நாகை, தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த புயல் காரணமாக, சென்னை உட்பட தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை இருக்குமா என்ற கேள்விகள் பரவலாக மக்களிடம் எழுந்துள்ளன. நவம்பர் மாதம் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 23 நாட்கள் தொடர்ந்து மழை இருந்துள்ளது. 7 நாட்கள்தான் மழை இல்லாத நாட்களாக இருந்தது. இந்த புயலின் தாக்கம், வடக்கு ஆந்திர பிரதேசம், ஒடிசா மாநிலம், மேற்கு வங்காளம் ஆகிய பகுதிகளில் தான் அதிகமாக மழையை ஏற்படுத்தப் போகிறது. எனவே இன்று மற்றும் நாளை ஆந்திர மாநிலத்திற்கு தேசிய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் பிறப்பித்திருக்கிறது. சில மாவட்டங்களில் ரெட் அலர்ட் விட வைக்கும் அளவுக்கு அதிக மழைப்பொழிவை கொடுக்கக் கூடும் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது. ஒடிசா மாநிலத்தில் 7 மாவட்டங்களுக்கு, நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயலின் தாக்கம் கஞ்சம், பூரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்கு மிக அதிக அளவிற்கு மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் இனி மழை குறையும் என்று பல தனியார் வானிலை ஆய்வாளர்களும் கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.