சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்கும் அரசாணையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது 'எக்ஸ்' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாதி மறுப்புக் கலப்புத் திருமணம்:

தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் அரசுப் பணிக்கு நியமனம் செய்யும்போது முன்னுரிமை பட்டியலில் சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்களையும் சேர்க்க தமிழக அரசு 1986 ஆம் ஆண்டு உத்தரவிட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் (2006-2011) தமிழக அரசின் இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்களில் 287 சாதி மறுப்புக் கலப்புத் திருமணம் செய்தவர்கள் பணி நியமனம் பெற்றனர். ஆனால், அதன் பிறகு வந்த அதிமுக ஆட்சியில் முன்னுரிமை அடிப்படையில் எவரும் நியமிக்கப்படவில்லை.

ரவிக்குமாரின் கோரிக்கை:

எம்.ஜி.ஆர். அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தை அவரது வாரிசாகக் கூறிக்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வலியுறுத்தியும் அவர் அதைச் செயல்படுத்தவில்லை என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார்.

திமுக அரசு அமைந்ததும் இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"சமூகநீதி காக்கும் திமுக அரசிலும் அந்த அரசாணை இதுவரை நடைமுறைக்கு வராத நிலையே உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதில்லை என்பதால் இதைச் செயல்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அது ஏற்கத்தக்க காரணம் அல்ல," என ரவிக்குமார் எம்.பி. தனது பதிவில் வலியுறுத்தியுள்ளார்.

சமூகநீதிக்கு ஊறு:

சனாதனக் கருத்தியல் செல்வாக்கால் தமிழ்நாட்டில் சாதியக் காழ்ப்பு அதிகரித்துவரும் சூழலில், சமத்துவத்தை நோக்கிய இத்தகைய சிறிய முன்னெடுப்புகளையும் புறக்கணிப்பது சமூகநீதிக்கு ஊறு விளைவிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சருக்கு வேண்டுகோள்:

எனவே, தேர்தலுக்கு முன்பாக இந்த அரசாணையை மீண்டும் செயல்படுத்திட உரிய வழிகாட்டுதலை அதிகாரிகளுக்கு வழங்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ரவிக்குமார் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.