விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை மர்ம நபர்கள் சிலர்  கரும்புத் தோட்டத்தில் வைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றதுடன் , கையை தனியே வெட்டி எடுத்துச் சென்றனர்.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் அப்துல் ஜப்பார். திருக்கோவிலூர் போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரிந்து வந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அப்துல் ஜப்பார் ஓய்வு பெற்றார்.

இந்நிலையில்  இன்று மாலை அப்துல் ஜப்பார், தனது வீட்டுக்கு அருகே உள்ள கரும்புத் தோட்டத்துக்கு சென்றார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர் அப்துல் ஜப்பாரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.

அப்படியே கீழே விழுந்த அப்துல் ஜப்பார் அடுத்த சிலநிமிடங்களில் துடிதுடித்து உயிரிழந்தார். அவர் உயிர் போகும் வரை  காத்திருந்த கொலைகாரர்கள், அவரது  கையை மட்டும் தனியே வெட்டி எடுத்துச் சென்றனர்.

முன்விரோதம் காரணமா, சொத்துத் தகறாரா அல்லது அவர் போலீசாக பணிபுரிந்தபோது அவரால் பாதிக்கப்பட்ட யாராவது வெட்டி கொலை செய்திருப்பார்களா என்ற கோணத்தில்  போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து திருவெண்ணைநல்லூர் காவல்துறையினர்  அப்துல் ஜப்பாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கையை  வெட்டி எடுத்துச் செல்லும் அளவுக்கு அவர் மேல் யார் கோபம் கொண்டிருப்பார்கள் ? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.