இனி சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தால் அவ்வளவு தான்.! அபராத தொகை பல மடங்கு உயர்வு - சென்னை மாநகராட்சி அதிரடி
சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10ஆயிரம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி மாமன்ற க்கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.
சாலை விபத்தை ஏற்படுத்தும் மாடுகள்
சென்னை அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனியில் பள்ளி முடிந்து தாயுடன் சென்ற சிறுமியை மாடு முட்டி சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதே போன்று எழும்பூர் பகுதியிலும் சாலையில் சென்ற நபரை மாடு முட்டி தள்ளியது. இதனையடுத்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து மாடு உரிமையாளர்களிடம் அபராதத் தொகையும் வசூலிக்கப்பட்டது. இந்தநிலையில் சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் அதிகளவு விபத்து ஏற்படுவதால் இதனை முழுமையாக கட்டுப்படுத்த அபராத தொகையை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.
அபராத தொகை உயர்வு
இதனையடுத்து இன்று சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் சென்னை ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் கூடியது. அப்போது சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை 10ஆயிரம் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சாலைகள் மற்றும் பொது இடங்களில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக மாடுகள் சுற்றித் திரிந்தால் தற்போது 2ஆயிரம் வரை உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கான இடையூறு ஏற்படாமல் தவிர்க்க மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால் அபராதம் தொகையை 10ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்
மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால்5,000ரூபாயும், மீண்டும் பிடிக்கப்பட்டால் 10,000 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படவுள்ளது. தற்போது நடைபெற்று வரும் மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் தற்போது வரை மொத்தம் 3468 மாடுகள் பிடிக்கப்பட்டு, 65 லட்சத்து 80ஆயிரத்து 700 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்