திண்டுக்கல்

தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த ஏராளமான டாஸ்மாக சாராயக் கடைகள் உச்சநீதிமன்ற அதிரடி உத்தரவு காரணமாக மூடப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் 112 சாராயக் கடைகள் மூடப்பட்டன. இவையனைத்தையும் வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால், அனைத்து இடங்களிலும் மக்கள் தங்களது கடுமையான எதிர்ப்பை தெரிவித்ததால் சாராயக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யும் பணியில் அதிகாரிகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பல்வேறு இடங்களில் சாராயக் கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்கள்.

சாராயக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஏராளமான மனுக்கள் வந்து குவிகின்றன.

நேற்றும் அப்படிதான் மனுக்கள் குவிந்தன. அதன்படி, கொடைக்கானல் தாலுகா வில்பட்டி ஊராட்சி வெள்ளப்பாறை, பேத்துப்பாறை, உப்புப்பாறைமெத்து, அஞ்சுவீடு, பாரதி அண்ணாநகர், வடகவுஞ்சி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நேற்று ஆட்சியர் டி.ஜி.வினயிடம் மனு கொடுத்தனர்.

அதில், “பெருமாள்மலை பகுதியில் இருந்த சாராயக் கடை அகற்றப்பட்டது. அந்த கடையை பேத்துப்பாறை அருகே இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சாராயக் கடை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அங்கு சாராயக் கடை வந்தால் எங்கள் கிராமங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே, இந்த பணிகளை உடனே நிறுத்த வேண்டும்” என குறிப்பிடப்பட்டு இருந்தனர்.

இதேபோல வேடசந்தூர் தாலுகா சித்துவார்பட்டியை சேர்ந்த அப்துல்நாசர் என்பவர் ஆட்சியரிடம் கொடுத்த மனுவில், ‘எங்கள் ஊர் அருகே புதிதாக சாராயக் கடை அமைக்கப்பட இருப்பதாக தெரியவந்துள்ளது. எங்கள் பகுதி முழுக்க, முழுக்க விவசாய பகுதியாகும். சாராயக் கடை வந்தால் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, எங்கள் பகுதியில் சாராயக் கடை அமைக்க அனுமதிக்க கூடாது” என தெரிவித்துள்ளார்.

இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.