Resistance to Kamal and Strength
மதுரையில், நடிகர் கமல் ஹாசனுக்கு எதிராக இந்து இளைஞர் பேரவையினர் திருவோடு அனுப்பும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இந்து தெய்வங்களை விமர்சிக்கும் கமல், மற்ற மத தெய்வங்களை விமர்சிக்கும் தைரியம் உள்ளதா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கமல் ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து சர்ச்சைக்குள்ளாகி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும், இது தொடர்பாக கமல் அளித்த பேட்டி குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன.
கமலின் பேச்சுக்கு எதிராக தமிழக அமைச்சர்கள் சிலர் பேசி வருவதும், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்கள் ஆதரவாக கருத்து தெரிவித்தும் வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி, கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கூறி திராவிட, தமிழ்த் தேசிய, இந்துத்துவ அமைப்புகள் விமர்சனம் செய்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் கமல் ஹாசன், பிக்பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் கூறப்பட்டது.
இந்த நிலையில், இந்து இளைஞர் பேரவையினர், பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தும் நடிகர் கமல் ஹாசனுக்கு திருவோடு அனுப்பும் போராட்டம் நடத்தினர்.
மதுரையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், கைகயில் திருவோடு கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது பேசிய அவர்கள், நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து தன் படங்களில் இந்து தெய்வங்களை இழிவாகக் காட்டி வந்தார். இந்து தெய்வங்களை விமர்சிக்கும் கமல், மற்ற மத தெய்வங்களை விமர்சிக்கும் தைரியம் உள்ளதா என போராட்டக்காரர்கள் அப்போது கேள்வி எழுப்பினர்.
தற்போது பணத்துக்காக தாய் மதத்தையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும், சேரி மக்களையும் இழிவுபடுத்தும் நிலைக்கு கமல் வந்துவிட்டார். அவர் இதுபோன்று செய்வதற்கு பிச்சை எடுக்கலாம். எனவே அவருக்கு திருவோடு அனுப்பும் போராட்டம் நடத்துவதாக இந்து இளைஞர் பேரவையினர் கூறினர். நடிகர் கமல் ஹாசன் இனிமேலும் தமிழ் மக்களையும், இந்து மதத்தையும் கிள்ளுக்கீரையாக நினைக்க வேண்டாம் எனவும் போராட்டக்காரர்கள் கூறினர்.
கமல் சில வருடங்களுக்கு முன்பு விஸ்வரூபம் படம் வந்தபோது இஸ்லாமிய அமைப்புகள், அவரை விமர்சனம் செய்த நிலையில் தற்போது இந்து அமைப்புகளாலும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறார்.
