திருவள்ளூர்

இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் இரண்டாவது நாளாக நேற்றும் பணி புறக்கணிப்புப் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

மருத்துவக் கல்லூரில் பட்ட மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

இதைக் கண்டித்தும், இட ஒதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அரசு மருத்துவர்கள் தங்களது பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தை வியாழக்கிழமை அன்றுத் தொடங்கினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களும் போராட்டத்தை நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்தனர்.

இதுகுறித்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறியது:

“எங்களது நியாயமான போராட்டத்துக்கு இதுவரை தமிழக அரசு செவி சாய்க்கவில்லை. மருத்துவர்கள் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்கவில்லை.

எனவே, இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர்.

இதில், ஜெகதீஷ், விஜயராஜ், ராஜ்குமார், ஷோபனா உள்பட 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பங்கேற்று தங்களது போராட்டத்திற்கு வலுசேர்த்தனர்.