Republic Day Celebration Police Protection with Gun for Thiruvalluvar in Kanyakumari
கன்னியாகுமரி
குடியரசு நாளான இன்று கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க, கன்னியாகுமரி கடல் பகுதியில் திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பும், கடல் பகுதியில் அதிநவீன படகுகளில் ரோந்துப் பனியிலும் கடலோர பாதுகாப்பு குழுமம் ஈடுப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் இன்று குடியரசு நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நாகர்கோவில் அண்ணாவிளையாட்டு அரங்கத்தில் குடியரசு நாள் விழா நடைபெறுகிறது.
இதனையொட்டி பாதுகாப்பு பணியில் மாவட்டம் முழுவதும் 1650 காவலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
குடியரசு நாளையொட்டி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பதற்காக கன்னியாகுமரி முதல் நீரோடி வரை உள்ள கடற்கரை கிராமங்களிலும் காவல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
கடலோர பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளர் சைரஸ் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சுடலைமணி, சரவணபெருமாள் தலைமையிலான குழுவினர் இரண்டு அதிநவீன படகுகளில் கன்னியாகுமரி கடல் பகுதியில் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஒரு குழுவினர் சின்னமுட்டம் முதல் கூடங்குளம் வரையும், மற்றொரு குழுவினர் சின்னமுட்டம் முதல் முட்டம் வரையிலும் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு படகுகளில் வரும் மீனவர்களிடம் அடையாள அட்டைகள் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி சோதனை செய்யப்படுகிறது. மேலும், கன்னியாகுமரி, சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம், குளச்சல், தேங்காப்பட்டணம் ஆகிய இடங்களில் உள்ள கடலோர சோதனைச் சாவடிகளிலும் காவலாளர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல கன்னியாகுமரி பகுதியில் உள்ள தங்கும் விடுதிகளிலும் காவலாளர்கள் சோதனை நடத்துகின்றனர். சந்தேகப்படும்படியாக யாரேனும் தங்கியுள்ளனரா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகை பதிவேடு போன்றவற்றையும் ஆய்வு செய்தனர்.
