'வீட்டு வசதி வாரியத்தில், வாடகை வசூல் அடிப்படையில் தான் ஊதியம் வழங்கப்படும்' என, பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவால், ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியும் கொந்தளிப்பு உருவாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில், வீட்டுவசதி வாரியம், வாடகை குடியிருப்பு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இங்கு வசிக்கும் மக்களிடம் மாதந்தோறும் வாடகை வசூலிக்க ஊழியர்கள் உள்ளனர். தற்போது, வீட்டு வாடகையை முறையாகக வசூலித்து கொடுத்தால் மட்டுமே சம்பவம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது தொடர்பாக, வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனர் கிரண் குராலா பிறப்பித்த அறிக்கை வருமாறு.

வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்புகளில் வசூலிப்பு பணிகள் முறையாக நடக்காத தால், நிலுவை தொகை அதிகரித்துள்ளது. இதனால், வாரியத்துக்கு நிதி இழப்பு ஏற்படுகிறது. எனவே, வாடகை வசூல் பணிகளை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இனி வரும் மாதங்களில், வாடகை குடியிருப்புகளில் இருந்து வசூலிக்கப்படும் தொகையில் இருந்து மட்டுமே அப்பிரிவு பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும். 
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து, வீட்டு வசதி வாரிய தொழிலாளர் முன்னேற்ற சங்கம், வாரிய நிர்வாக இயக்குனருக்கு எழுதிய கடிதம்:அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் உத்தரவாதமான சம்பளம் மற்றும் சலுகைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் பணி புரிகின்றனர்.

வாடகை நிலுவை தொகையை வசூலிக்க, நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், இவ்வளவு சதவீதம் வாடகை வசூலிக்க வேண்டும் என, கட்டுப்பாடுகள் விதிக்கலாம். நிலுவை தொகையை, தனியாக பிரித்து வசூலிக்க வழி காண வேண்டும். 

இதற்கு, செயற்பொறியாளர் நிலையில் இருந்து நடவடிக்கை வேண்டுமே தவிர, பணியாளர்கள் ஊதியத்தில் கை வைக்கக் கூடாது.இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை அமலுக்கு வந்தால் அதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்த ஊழியர்கள் தீவிரமடைந்துவிட்டனர்.