வேலூர்

பாலாற்றில் புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்திவிட்டு மாட்டு வண்டிகளில் மணல் அள்ளிச் சென்றதால் பதறிப் போன மக்கள் மாட்டு வண்டிகள் மற்றும் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம, ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் பாலாற்றில் பொதுப்பணித்துறை சார்பில், மாட்டு வண்டிகளுக்கு மணல் வழங்கும் குவாரி செயல்பட்டு வருகிறது. 

இந்த குவாரியில் இருந்து நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுத்து செல்லப்படுகிறது. 

இந்த நிலையில் அரசு அனுமதியளித்த பாலாற்று குவாரி பகுதியை விட்டுவிட்டு அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் இருந்து மாட்டு வண்டிகளில் உரிமையாளர்கள் மணல் அள்ளியுள்ளனர். இதனைத் தடுக்க வருவாய்த்துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் இராட்சத பள்ளங்களை வெட்டியுள்ளனர். 

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு அண்ணா நகர் சுடுகாட்டு பகுதியில் இறந்த நபர் ஒருவரின் உடல் புதைக்கப்பட்டது. 

இந்த நிலையில் மாட்டு வண்டிகளில் மணல் அள்ளுபவர்கள் புதைக்கப்பட்ட பிணத்தை அப்புறப்படுத்திவிட்டு அந்தப் பகுதியில் மணல் அள்ளியுள்ளனர். இதனால் சினம் அடைந்த அப்பகுதி மக்கள், “அனுமதியில்லாத இடங்களில் மணல் அள்ளப்படுவதை தடுக்க வேண்டியும், மணல் ஏற்றி வரும் மாட்டு வண்டிகளால் மக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது” என்றும் கூறி மாட்டு வண்டிகள் மற்றும் பேருந்துகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவலறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஆற்காடு தாலுகா காவலாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவே மக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அமைதியாக கலைந்து சென்றனர். 

புதைக்கப்பட்ட உடலை அப்புறப்படுத்திவிட்டு மணல் அள்ளிய சம்பவ அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.