ஈரோடு

சிவகிரி பேரூராட்சியில் உள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு விதிக்கப்பட்ட புதிய வரிகளை நீக்க வேண்டும் என்று அனைத்து வணிகர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

ஈரோட்டில் அனைத்து வணிகர்கள் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அனைத்து வணிகர்கள் சங்கத் தலைவர் ஜோதிராமலிங்கம் தலைமை வகித்தார், செயலர் கமலக்கண்ணன் வரவேற்றுப் பேசினார்.

இந்தக் கூட்டத்தில், "சிவகிரி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள தொழில்நிறுவனங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.300 முதல் ரூ. 150 மற்றும் ரூ. 100 -ம் , வீடுகளுக்கு ரூ. 10 வரி செலுத்த வேண்டும் எனவும் பேரூராட்சி நிர்வாகம் நிபந்தனை விதித்துள்ளது. இந்த புதிய வரிவிதிப்பை நீக்க வேண்டும்.

ஏற்கெனவே பேரூராட்சி நிர்வாகத்துக்கு வணிகர்கள் சொத்துவரி, வணிக வரி, சேவை வரி, வருமான வரி, சாலை வரி உள்ளிட்ட பல்வேறு வரிகளைச் செலுத்திவரும் நிலையில் தற்போது புதிதாக குப்பை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆண்டு முழுவதற்கும் உள்ள குப்பை வரியை ஒரே சமயத்தில் செலுத்த வேண்டும் என பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது வேதனைக்குரியது ஆகும். 

எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள குப்பை வரி மற்றும் கட்டண அட்டவணை அபராதங்கள் போன்றவற்றை முழுமையாக நீக்கம் செய்து, வணிகர்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும்" போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அனைத்து வணிகர்களும் ஊர்வலமாகச் சென்று சிவகிரி பேரூராட்சி செயல் அலுவலர் ஈஸ்வரமூர்த்தியைச் சந்தித்து தீர்மானத்தை மனுவாகக் கொடுத்தனர்.

இந்தக் கூட்டத்தில் பேக்கரி, டீ கடை, ஹோட்டல்கள், காய்கனிக் கடை, சலூன், மளிகைக் கடை நடத்துவோர் மற்றும் மக்கள் உள்பட வியாபாரிகள் பங்கேற்றனர்.