கடலூர்
 
கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். இதற்கு பயணிகள் பாராட்டுகளை தெரிவித்தனர். 

கடலூர் பேருந்து நிலையத்தை வியாபாரிகளின் ஆக்கிரமித்திருப்பதால் பேருந்து பயணிகளுக்கான காத்திருப்பு அறை, நடைமேடை என அனைத்து இடங்களிலும் வியாபாரிகள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். 

இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள நடைமேடையில் கூட பயணிகள் நிற்கவும், உட்காரவும் முடியாத சூழல் இருந்தது. பயணிகள் அனைவரும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் கும்பல், கும்பலாக கால்கடுக்க நின்றனர். 

இதுகுறித்து நகராட்சி ஆணையாளரான சரவணன் ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டுச் சென்றார். இதையடுத்து ஆக்கிரமிப்பு வியாபாரிகளுக்கு சுற்றறிக்கை கொடுத்துவிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஆணையாளர் சரவணனுக்கு ஆட்சியர் தண்டபாணி அதிரடியாக உத்தரவிட்டார்.

அதன்படி பேருந்து நிலையத்தில் இருந்த ஆக்கிரமிப்பு வியாபாரிகளுக்கு நேற்று முன்தினம் நகராட்சி நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை வழங்கப்பட்டது.

இதனையடுத்து நேற்று காலை பேருந்து நிலையத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. இதற்காக நகராட்சி ஆணையாளர் சரவணன், இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், வருவாய் அதிகாரி சுகந்தி, சுகாதார ஆய்வாளர் திருப்பதி, பாக்கியநாதன் மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை தொழிலாளர்கள் ஆகியோர் பொக்லைன் எந்திரம், லாரியோடு பேருந்து நிலையம் வந்தனர். 

ஆக்கிரமிப்பு அகற்றும் பணிக்கு வியாபாரிகளால் இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக துணை காவல் கண்காணிப்பாளர் அகஸ்டின் ஜோசுவா லாமேக் தலைமையில் ஏராளமான காவலாளர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். 

அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை எதிர்பாராத வியாபாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்து நிலையத்துக்குள் பேருந்துகள் நுழையும் பகுதியில் நாகம்மன் கோயிலையொட்டி உள்ள செருப்புக்கடையில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி தொடங்கி பேருந்து நிலையம் முழுவதும் நடந்தது.

இதற்கு முன்னாள் நகரசபை தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரனின் பழக்கடையையொட்டி உள்ள சந்து ஆக்கிரமிக்கப்பட்டு இருந்ததால் அதனையும் அதிகாரிகள் அகற்றினர். 

புதிய வணிக வளாகத்தில் உள்ள பிரபல இனிப்புகடையொன்றின் முன்பு அரை அடி உயரத்துக்கு பிளாட்பாரத்தை கட்டி தள ஓடுகள் பதித்திருந்தனர். பொக்லைன் எந்திரம் மூலம் அதனை பெயர்த்தெடுத்து அகற்றினார்கள். 

பேருந்து நிலையத்தின் மேற்கு பகுதியில் கடைக்கு ஒதுக்கப்பட்ட இடத்துக்கு வெளியே இருந்த அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன. அதோடு கடைக்கு வெளியே இருந்த மின்விசிறிகள், விளக்குகள், கடைகளின் முகப்பில் இருந்த விளம்பர பலகைகள் அனைத்தும் அகற்றப்பட்டது. மேலும், தென்புற பிளாட்பாரத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டன.

நகராட்சி ஊழியர்கள் அகற்றினால் பொருட்களுக்கு சேதம் ஏற்படும் என்பதால் பல வியாபாரிகள் தங்கள் கடைகளின் ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றினார்கள். இதனால் பேருந்து நிலைய நடைபாதை விசாலமானது. 

ஆக்கிரமிப்புகளை அகற்றிய நகராட்சி ஆணையத்தின் இந்த நடவடிக்கையை பயணிகள் பாராட்டினர்.