பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்ட சிறுமி ஹாசினியின் குடும்பத்துக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
போரூர் அருகே கடந்த 5ம் ஞாயிற்றுகிழமை மாயமான 6 வயது சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டு, முட்புதரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கபட்டார்.
மாயமான ஞாயிறு மாலை வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினியை திடீரென காணவில்லை. சிறுமியின் தந்தை பாபுவும், அவரது மனைவியும் அருகில் உள்ள கடைக்கு சென்று விட்டு திரும்பி வந்து குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உறவினர் வீடு, பள்ளி, மைதானம் என பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்கவில்லை., எனவே பெற்றோர் மாங்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபொது, அன்றிரவு அதே குடியிருப்பில் வசிக்கும் தஷ்வந்த் என்பவர் பேக் ஒன்றை வீட்டிலிருந்து எடுத்துச்செல்வதும், பின்னர் 10 மணி அளவில் பேக் இல்லாமல் வீட்டிற்கு திரும்புவதும் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
அவரிடம் நடத்திய கிடுக்கிப்படி விசாரணையில், சிறுமியை கொலை செய்தது தெரியவந்தது.
தான் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஹாசினியை தான்தான் கடத்தியதாகவும் வாக்குமூலம் அளித்தார்.
ஹாசினியை வீட்டுக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சிக்கையில் ஹாசினி கத்தி கூச்சலிட்டதாகவும் உடனே பயத்தில் ஹாசினியின் கழுதை நெரித்து கொலை செய்ததாகவும் கூறினார்.

பின்னர் அதை மறைக்க வீட்டில் இருந்த ட்ராவல் பேக்கில் சிறுமியின் சடலத்தை எடுத்து சென்று அனகாபுத்தூர் மேம்பாலம் அருகே உள்ள புதரில் வைத்து எரித்ததாகவும் கூறினார்.
பின்னர் போலீசார் தஷ்வந்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நெஞ்சை பதைபதைக்க செய்யும் இந்த கொலை சம்பவத்துக்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் பொதுமக்களும் கண்டனம் தெரிவது வந்தனர்.
இந்நிலையில் கொல்லப்பட்ட சிறுமி ஹாசினியின் குடும்பத்துக்கு முதல்வர் ஓபிஎஸ் இன்று ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
அதிமுகவில் நடைபெற்று வெறும் அதிகார சண்டையின் காரணமாக ஒரு வாரம் கழித்து தலைமை செயலகத்துக்கு சென்ற ஓபிஎஸ் இன்று இந்த நிவாரண தொகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
