Refusing to buy ten rupees coin Persecuted bank business people are faced with business ...

திருச்சி

திருச்சியில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்து வங்கி மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மக்கள் அலைக்கழித்து வருவதால் ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெறும் கண்துடைப்பா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் திருவானைக்காவல், திருவரங்கம், திருச்சி போன்ற பல்வேறு நகரப் பகுதிகளுக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் தொழிலாளர்களுக்கு அவ்வப்போது கிடைக்கும் கூலியில் 10 ரூபாய் நாணயங்களும் கிடைக்கிறது.

அந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக்கொண்டு கடைகளில் மளிகை சாமான் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்லும் போதும், வார நாட்களில் கூடும் சந்தைகளில் காய்கறிகள் வாங்கி விட்டு வியாபாரிகளிடம் கொடுக் கும் போதும் அவர்கள் அதனை வாங்க மறுக்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் சேமிப்பதற்காக 10 ரூபாய் நாணயங்களை வங்கிகளில் டெபாசிட் செய்ய செல்லும் போது வங்கி மேலாளர் மற்றும் காசாளர் வாங்க மறுக்கின்றனர். இதனால் வங்கி ஊழியர்களுக்கும், மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.

ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் என்று அறிவித்தபோதும் வங்கிகளே வாங்க மறுப்பது ஏன்? என்று தெரியாமல் மக்கள் புலம்புகின்றனர். மேலும், வங்கிகளே வாங்க மறுப்பதால் 10 ரூபாய் நாணயம் செல்லாதோ? என்ற சந்தேகம் ஒவ்வொரு வருக்கும் ஏற்படுகிறது.

இதுகுறித்து திருப்பைஞ்சீலியை சேர்ந்த பெண் ஒருவர், "என்னுடைய கணவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். அவர் நாள்தோறும் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடும் போது பங்க் ஊழியர்கள் சில்லறை பாக்கிக்காக 10 ரூபாய் நாணயங்களை கொடுக்கின்றனர்.

எங்களை போன்று பெண்கள் பஸ்சில் செல்லும் போது கண்டக்டர் 10 ரூபாய் நாணயங்களை எங்களிடம் கொடுக்கிறார். இந்த நாணயம் செல்லும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்ததால் தான் கிராமப்புறத்தில் இருக்கும் எங்களை போன்றவர்கள் வாங்கி கொள்கிறோம்.

ஆனால் அதே நாணயங்களை நாங்கள் கொடுக்கும்போது வாங்க மறுக்கிறார்கள். இதைவிட கொடுமை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட வாங்க மறுக்கிறார்கள்.

கிழிந்த ரூபாய் நோட்டுக்களை கூட வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு உள்ள நிலையில் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பது ஏன்? ரிசர்வ் வங்கி அறிவித்த அறிவிப்பு கண் துடைப்பா? அல்லது மக்களை அலைக்கழிப்பதில் அவர்களுக்கு ஒரு ஆனந்தமா" என்ற கேள்வியே எழுப்புகிறார் அந்த பெண்.