Reconstruction works are underway to prevent the dehydration of rivers and irrigation channels
நாகப்பட்டினம்
நாகப்பட்டினத்தில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்துள்ள வெள்ள நீரை ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களின் நீர்ப்போக்குக்கு தடைபடாத வகையில் சீரமைப்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன என்று மாநில கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் மற்றும் சீரமைப்பு நடவடிக்கைகளை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேற்று பார்வையிட்டார். அங்கு ஆய்வும் மேற்கொண்டார்.
காரைமேடு, பனங்குடி, திருமருகல், மருங்கூர், கோகூர், விற்குடி, வடகரை, நாகூர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்ற பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளையும், விற்குடி மற்றும் ஒக்கூரில் ஆற்றின் நீரோட்டத்தை தடுக்கும் வகையில் உள்ள செடி, கொடிகளை அகற்றும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார்.
அப்போது, திருமருகல் குளத்தின் கரையோரங்களைப் பலப்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு அவர் அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வுகளுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஓ.எஸ்.மணியன், "நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடியிருப்புப் பகுதிகளைச் சூழ்ந்த வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளும், ஆறுகள் மற்றும் பாசன வாய்க்கால்களின் நீர்ப்போக்குக்கு தடைபடாத வகையிலான சீரமைப்புப் பணிகளும் விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன' என்றுத் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார், நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் கே.கோபால், நாகப்பட்டினம் சட்டப்பேரவை உறுப்பினர் தமிமுன் அன்சாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ஆர்.சங்கர், வருவாய்க் கோட்டாட்சியர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
