திமுகவின் ஊதுகுழலாக காங்கிரஸ் செயல்படுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.  செல்வப்பெருந்தகை, சுயநலத்திற்காக காங்கிரஸை திமுகவிடம் அடமானம் வைத்துவிட்டதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். 

ADMK criticizes Congress DMK alliance : தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பயணத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை விமர்சித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் இறங்கியுள்ளது. இதனையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தைக்கு எதிராக வெளியிட்டுள்ள பதிவில்,,

திமுகவின் ஊதுகுலலாககாங்கிரஸ்

நூறாண்டுகள் பாரம்பரியம், வரலாறும் கொண்ட,இந்திய சுதந்திரத்திற்காக போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தை இன்று திமுகவின் ஊதுகுலலாக , ஜால்ராவாக மாற்றிய பெருமை செல்வ பெருந்தகைக்கு உண்டு. இன்றைக்கு அதிமுகவை பற்றி எடப்பாடியாரை பற்றி ஒரு தவறான கருத்தை , வெறும் வாயில் அவல் கிடைத்தது போல தவறான கருத்தை சித்தரித்து கதைகள் , கட்டுரைகள், எழுதி விமர்சனம் செய்து கொண்டிருப்பதை ஒரு நாளும் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .

இன்றைக்கு திமுகவின் ஊது குழலாக சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் பணி செய்வது என்று கடமையாக நினைத்து செஞ்சோற்று கடனை செலுத்து வகையில் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை செல்வப் பெருந்தகை அடமானம் வைத்து விட்டார் என்பதை தமிழ்நாடு பார்க்கிறது. இன்றைக்கு நீங்கள் ஐந்து கட்சிக்கு போய் வந்தவர்கள் அதே போல செந்தில் பாலாஜியும் ஐந்து கட்சிக்கு போய் வந்தவர் .இப்படி பல கட்சிகளுக்கு போய் வந்தவர்களை பெரிய பதவி கொடுத்து அழகு பார்ப்பது திமுகவும் ,காங்கிரஸ்தான். மக்களுக்காக அரிய சேவை செய்து கல்வி வளர்ச்சிக்கும், நீர் மேலாண்மைக்கும், 

மௌனம் விரதம் இருந்தது காங்கிரஸ் கட்சி

தொழில் வளர்ச்சிக்கும் வித்திட்ட கர்மவீரர் காமராஜரை பற்றி திருச்சி சிவா, ஆர்.எஸ் பாரதி ஆகியோர் வாய்க்கு வந்ததுக்கு விமர்சித்து, எளிமையின் அடையாளமாக இருந்த காமராஜரை ஏசி இல்லாமல் உறங்க மாட்டார் என்று கருணாநிதி சொன்னதாக கருத்தை சொன்னபோது அப்போது மௌனம் விரதம் இருந்தது காங்கிரஸ் கட்சி.

தற்போது எடப்பாடியாரை பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை பரப்பி வருகிறீர்கள், மேலும் அருவருதக்க வகையில் யாரும் ஏற்றுக்கொள்ள வகையில் பேசுகிறீர்கள். இதனால் எங்கள் மன வேதனை அடைகிறது. இதை ஆளும் அரசு கூட வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எல்லோரும் தெரிந்து ஒன்றுதான். நீங்கள் புரட்சி பாரதம் தொடங்கி புதிய தமிழகம் ,விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவற்றில் பணியாற்றி விட்டு தற்போது காங்கிரஸில் இணைந்து தலைவராகி உள்ளீர்கள்‌ கருத்து சொல்கிறேன் என்ற அடிப்படையில் பிற பிறரை அவமதிக்கக் கூடிய வகையில் பேசக்கூடாது.

புரட்சித்தலைவர் ,புரட்சித்தலைவி அம்மா ஆகியோரை சட்டசபையில் நீங்கள் அவதூறாக பேசிய சட்டசபை குறிப்பு இன்னும் உள்ளது .இதை எங்களால் எப்படி பொறுத்துக் கொள்ள முடியும். இன்றைக்கு எடப்பாடியார் பதில் சொன்னார் என்றால் அதற்கு நீங்கள் மாற்றுக் கருத்து சொல்லலாம் அதற்கு பதிலாக அவர் உருவ பொம்மை எரிப்பது என்பது வரம்புக்கு மீறிய செயலாகும் இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று நாங்கள் கடுமையாக எச்சரிக்கை விடுகிறோம்.

ஸ்டாலின் காலில் அடமானம்

நீங்கள் காங்கிரஸ் கட்சியை அடமானம் வைத்த காரணத்தால் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் பாரம்பரியத்தை காப்பாற்ற இன்றைக்கு குரல் கொடுக்க வேண்டிய அவசிய நிலை வந்திருப்பது என்பதை கண்கூடாக தெரிகிறது.

உங்கள் சுயநலத்திற்காக காங்கிரஸ் பேரியக்கத்தை இன்றைக்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் காலில் அடமானம் வைத்திருப்பதை எந்த உண்மையான காங்கிரஸ் தொண்டர்களும், தமிழ்நாடு மக்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது நிதர்சனமான உண்மை என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.