பள்ளிப்பட்டு,

பள்ளிப்பட்டு அருகே, தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தப்பட்ட 300 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேசன் அரிசி கடத்திய அண்ணன், தம்பி இருவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை பகுதியில் இருந்து சிலர் ஆந்திர மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்துவதாக ஆர்.கே.பேட்டை காவலாளர்களுக்கு இரகசியமாக தகவல் ஒன்றுக் கிடைத்தது.

உடனே, திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்திரவின்பேரில் ஆர்.கே.பேட்டை ஆய்வாளர் ராமதாஸ் மற்றும் காவலாளர்கள் நேற்று காலை ஆர்.கே.பேட்டை பஜார் தெருவில் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது அந்த வழியாக இரண்டு ஆட்டோக்கள் வேகமாக வந்தன. காவலாளர்கள் அந்த ஆட்டோக்களை நிறுத்தி அதில் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆட்டோக்களில் 300 கிலோ ரேசன் அரிசி இருந்ததும், அவை தமிழகத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது.

இதனையடுத்து காவலாளர்கள் இரண்டு ஆட்டோக்களையும் அதில் இருந்த 300 கிலோ ரேசன் அரிசியையும் கைப்பற்றினர்.

மேலும் ஆட்டோக்களை ஓட்டி வந்த ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த மணி (36) என்பவரையும், அவரது தம்பி சதீஷ் (33) என்பவரையும் காவலாளர்கள் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 300 கிலோ ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.