Ration shop Change request before collapse

திருப்பூர்

அவினாசி, தெக்கலூர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் இருக்கும் ரே‌சன் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், அவினாசி தெக்கலூர் வெள்ளாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த மக்கள் மனு ஒன்றைக் கொடுத்தனர்.

அதில், “எங்கள் பகுதி மக்கள் தெக்கலூர் பகுதியில் உள்ள ரேசன் கடையில் பொருட்கள் வாங்குகின்றனர். ரேசன் கடை வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மிக பழமையான கட்டிடமாக இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

இந்த நிலையில் சிறிது தூரத்தில் ரேசன் கடைக்கான புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை புதிய கட்டிடத்தில் ரேசன் கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை.

எனவே, பழைய கட்டிடத்தால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறும் முன்பு புதிய கட்டிடத்திற்கு ரேசன் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டிருந்தது.