ரேசன் அரிசி கடத்தியவர் குண்டர் சட்டத்தில் கைது; காவல்துறையின் பரிந்துரையை ஏற்று ஆட்சியர் அதிரடி...
கிருஷ்ணகிரியில் 2050 கிலோ ரேசன் அரிசி கடத்தி வந்த காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞரை காவலாளர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட உணவுக் கடத்தல் பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த். இவரது தலைமையில் காவலாளர்கள் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, கிருஷ்ணகிரியில் உள்ள இராயக்கோட்டை மேம்பாலம் உள்ளிட்ட இடங்களில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, காஞ்சிபுரம் மாவட்டம், பெரிய காஞ்சிபுரம், முகமதுபேட்டையைச் சேர்ந்த பிலால் என்பவர் வேனில் ரேசன் அரிசி கடத்தி வந்ததை காவலாளர்கள் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து 2050 கிலோ ரேசன் அரிசியை பறிமுத்ல செய்ததோடு பிலாலையும் காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.
பிலாலிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் தொடர்ந்து ரேசன் அரிசியை கடத்தும் குற்றத்தில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரிந்தது. அதுமட்டுமின்றி, அவர் மீது இன்னும் பல குற்ற வழக்குகள் இருக்கிறது என்பதையும் காவலாளர்கள் கண்டறிந்தனர். இதனால் அவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தைப் போட காவலர்கள், கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவனுக்கு பரிந்துரைத்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட ஆட்சியர், பிலாலை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். உத்தரவை ஏற்ற காவலாளர்கள், பிலாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.