கடந்த 2 மாதங்களில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வழங்குகிறது. இந்த அரிசியை பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி, கடத்தல்காரர்கள் கேரளாவில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

தமிழக–கேரள எல்லையோர கிராமங்கள் வழியாக இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கடத்தி வருகின்றனர்.

மேலும் இரயில் மூலம் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்படுகிறது. ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமைப்பொருள் தனி தாசில்தார் செல்வபாண்டி மற்றும் அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களில் பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் குடிமைப்பொருள் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த அரிசி மூட்டைகளை பொள்ளாச்சி ஜோதி நகரில் உள்ள நுகர்வோர் வாணிப கிடங்கிற்கு லாரியில் கொண்டு செல்லப்பட்டன.

“இரயில் மற்றும் வாகனங்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவதை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள், அலுவலக வளாகத்தில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. அந்த அரிசி மூட்டைகள் நுகர்வோர் வாணிப கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பொதுமக்கள் ரேஷன் அரிசி வாங்கி, விற்பனை செய்வது சட்டவிரோதமாகும். ரேஷன் அரிசி கடத்துவோர் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். ரேஷன் அரிசி விற்பனை செய்வோர் மற்றும் கடத்துவோர் மீது உணவு கடத்தல் தடுப்பு பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்தனர்,.