விருதுநகர்,

ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் பெயரை வழங்கல்துறை முன்னறிவிப்பு இன்றி நீக்கியுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர்.

தமிழக அரசு ரேசன் அட்டைகளில் குடும்ப தலைவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது.

அதிலும், குறிப்பாக குடும்ப தலைவரின் ஆதார் எண் பதிவு செய்யப்படாவிட்டால் ரேசன் அட்டை இரத்து ஆகிவிடும் என்று கூறப்பட்டது.

இதனால், அனைத்து ரேசன் அட்டைதாரர்களும், தங்களது ஆதார் எண்களை பெற்று ரேசன் கடைகளுக்குச் சென்று பதிவு செய்தனர்.

ஆனால், ஒருசிலர் ஆதார் எண்ணை பதிவு செய்யாததால் அவர்களது ரேசன் அட்டைகளுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படவில்லை.

இந்த நிலையில் ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்களை பதிவு செய்யாவிட்டால் அவர்களது பெயர்களையும் ரேசன் அட்டைகளில் இருந்து வழங்கல்துறை நீக்கியுள்ளது.

இதுபற்றி அட்டைதாரருக்கு முறையாக எந்த முன்னறிவிப்பும் தெரிவிக்கப்படவில்லை. ரேசன் கடைகளில் உள்ளவர்களுக்கும் இதுபற்றி எந்த விவரமும் தெரியவில்லை என்பது ரேசன் கடைகளில் வேலை செய்யும் அதிகாரிகளின் நிலை.

இதனால் அரசு மற்றும் தனியார் வேலைகளில் கூட முகவரி சரிபார்த்தலுக்கும் மற்றும், பல்வேறு தேவைகளுக்காக ரேசன் அட்டையினை ஆவணமாக தர வேண்டியுள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் திடீரென எந்த தகவலும் இல்லாமல் பெயர் நீக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் ஆதார் அட்டைக்காக பதிவு செய்தவர்களுக்கே இன்னும் ஆதார் அட்டை வழங்கப்படவில்லை. தற்போது தான் இதற்கான சிறப்பு பதிவு முகாம்கள் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படுகிறது. அங்கு சென்று ஆதார் அட்டைக்கான விவரங்களை பதிவு செய்தாலும் ஆதார் அட்டை கிடைப்பதற்கு 60 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை ஆகும் என்பது அனைவரும் அறிந்ததே, இந்த கால கெடுக்களை தாண்டி செல்லுமே தவிர, குறைய வாய்ப்பில்லை.

கல்வி ஆண்டின் இறுதியில் உள்ள மாணவ – மாணவிகள் அடுத்த கல்வியாண்டிற்கான நுழைவு தேர்வுகள், விண்ணப்பங்கள், உயர்படிப்புக்கான விண்ணப்பங்கள் ஆகியவற்றை அனுப்புவதற்கு ரேசன் அட்டை அவசிய தேவையாக உள்ளது.

இந்த நிலையில் அவர்களது பெயர் அதில் இருந்து நீக்கப்பட்டதால் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிட்டுள்ளது.

“குடிமை பொருள் வழங்கல் துறையினரும் இது பற்றி முறையான அறிவிப்பினை வெளியிட வில்லை. எனவே தமிழக அரசு ஆதார் எண் பதிவு செய்யாத குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை ரேசன் அட்டையில் இருந்து நீக்குவதை தவிர்த்து விட்டு அதற்கான பொருட்கள் விநியோகத்தை குறைத்துக் கொண்டு அவர்கள் பெயர் பதிவு பெற்றதும் அந்த ரேசன் அட்டைக்கான பொருட்களின் அளவை அதிகரித்து கொள்ளலாம்” என்று பாதிக்கப்பட்டவர்கள் கருத்து தெரிவித்தனர்.

மேலும், தமிழக அரசு இதற்கான அறிவிப்பினை முறையாக வெளியிடுவதுடன் ஆதார் எண் பதிவிற்கும், ஆதார் அட்டை வழங்குவதற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.