புனித ஸ்தலமான ராமேஸ்வரத்தில், வடமாநில சுற்றுலா பயணிகளுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கொடூரத் தாக்குதலில் முடிந்தது. கோதண்ட ராமர் கோவில் அருகே நடந்த இந்த சம்பவத்தில், சுற்றுலா பயணிகள் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவில் உலகபிரசித்த பெற்ற புண்ணிய ஸ்தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அனைத்து மாநிலங்கள் உள்பட உலக நாடுகளிலிருந்து வருகை தருகின்றனர். குறிப்பாக இங்கு வருகை தரும் பக்தர்கள் காசிக்கு நிகராக கருதப்படும் புண்ணிய தீர்த்தமான அக்னி தீர்த்த கடலில் புனித நீராடுவது குடும்ப கஷ்டங்களை கழித்து நல்ல பலன் கிடைக்கும் என்பதை ஐதீகமாக கருதுகின்றனர். குறிப்பாக இக்கோவிலுக்கு வடமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.
இந்நிலையில் வடமாநிலத்தை சேர்ந்தவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள் கடுமையாக தாக்கிய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை இராமேஸ்வரம் கோதண்ட ராமர் கோவில் அருகே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அப்போது திடீரென வடமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பானது. இதில் வடமாநிலத்தை சுற்றுலா பயணிகளின் மண்டையை உடைத்து ஜட்டியுடன் ஓட விட்டு விரட்டி அடித்துள்ளனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் ஓருவருக்கும் மண்டையில் ரத்தம் கொட்டியது. எப்படி இருந்தாலும் இது தவறான முன் உதாரணம். என்னதான் பிரச்சினையாக இருந்தாலும் காவல்துறை மூலம் பேசி சரி செய்ய வேண்டும் யாத்திரை அடிப்பது மண்டையை உடைப்பது, தாக்குவது சரியல்ல. இது நமது இராமேஸ்வரம் தீவுப்பகுதிக்கு மிகப்பெரிய உலகளாவிய கெட்ட பெயரை ஏற்படுத்தும். ஆகையால் காவல்துறை மற்றும் தமிழக அரசு இதை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே திருத்தணியில் வடமாநில இளைஞர் மீது கஞ்சா போதையில் 4 சிறார்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சி அடங்குவதற்குள் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.


