Ramadoss give Instruction to tamilnadu government

சென்னையில் விதிமீறல்களை செய்து கட்டப்பட்ட அனைத்து கட்டிடடங்களையும் இடிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

சென்னை தியாகராய நகரில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சேதமடைந்ததைத் தொடர்ந்து பாதுகாப்புக் கருதி அக்கட்டிடம் இடிக்கப்பட்டு வருகிறது.

அதேநேரத்தில் சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள் இடிக்கப்படாது என்று வீட்டு வசதித்துறை அமைச்சரும், செயலாளரும் கூறுவது கண்டிக்கத்தக்கது.

சென்னையில் விதிகளை மீறி அடுக்குமாடிக் கட்டிடங்கள் கட்டப்படுவதும், அவற்றுக்கு எதிர்ப்பு எழும்போது அரசுக் கணக்கில் சிறு தொகை வரன்முறைக் கட்டணமாகவும், ஆட்சியாளர்கள் கணக்கில் பெருந்தொகை கையூட்டாகவும் பெறப்பட்டு வரன்முறைப்படுத்தப்படுவதும் வாடிக்கையாகி விட்டன.

எனவே, கட்டிடங்களை வரன்முறைப்படுத்துவதோ, மூடி முத்திரையிடுவதோ எந்த பயனையும் ஏற்படுத்தாது.

விதிமுறை மீறிய கட்டிடங்களை இடித்து விட்டு விதிகளின்படி புதிதாகக் கட்டுவது தான் யாருக்கும் பாதிப்பில்லாத தீர்வாக அமையும்.

இதை செய்வதற்கு பதிலாக வரன்முறைப்படுத்துதல், மூடி முத்திரையிடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் விதிமீறல் கட்டிடங்களைக் காப்பாற்ற தமிழக ஆட்சியாளர்கள் முயலுகின்றனர்.

விதிமீறல் கட்டிடங்கள் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் இருந்து விட்டு, நீதிமன்றங்கள் தடை விதித்தது தான் அனைத்துக்கும் காரணம் என்று நீதிமன்றங்களின் மீது பழிபோட்டு தப்பிக்க முயல்கிறது தமிழக அரசு.

இந்நிலை நீடித்தால் ஊழலும் மவுலிவாக்கம் கட்டிட இடிபாடு, தியாகராயர்நகர் தீ விபத்துக்கள் போன்ற சோகங்களும் தொடரும். இது தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எந்த வகையிலும் நல்லதல்ல.

எனவே சென்னையில் விதிமீறல்கள் செய்து கட்டப்பட்ட அனைத்து கட்டிடடங்களையும் இடிப்பதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு ராமதாஸ் அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.