Rajiv Gandhi murder case convict Murugan cellphone seized case again Adjourned

வேலூர்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் சிறையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையை மீண்டும் ஒத்தி வைத்தது வேலூர் நீதிமன்றம்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனைப் பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் மத்திய சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முருகன் அடைக்கப்பட்டுள்ள அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தியபோது அவரது அறையில் இரண்டு செல்போன்கள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை காவலர்கள் கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். மேலும், அங்கிருந்து இரண்டு சிம்கார்டுகளும், ஒரு சார்ஜரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்த பாகாயம் காவலாளர்கள் வழக்குப் பதிந்துவிசாரணை நடத்தி வந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து முருகனும், அவரது மனைவி நளினியும் சந்திக்கவும், உறவினர்கள் சந்தித்துப் பேசவும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு முருகனை பார்ப்பதற்காக இலங்கையில் இருந்து வேலூர் வந்த அவருடைய தாய் சோமணியம்மாளுக்கும், முருகனை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. முருகனை நீதிமன்றத்திற்கு காவலாளர்கள் அழைத்து வரும்போது சோமணியம்மாள் நீதிமன்றத்திற்கு வந்து பார்த்து விட்டுச் சென்றார்.

இந்த நிலையில் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைத் தொடர்பாக, வேலூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் எண் - 1-ல் கடந்த 25-ஆம் தேதி மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்னிலையில் முருகன் சமர்ப்பிக்கப்பட்டார். அவ்வழக்கு விசாரணையை ஜூன் மாதம் 6-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்திவைத்து இருந்தார்.

அதன்படி, முருகனை நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிப்பதற்காக காட்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் மாணிக்கவேல் தலைமையில் துப்பாக்கி ஏந்திய காவலாளர்கள் பலத்த காவலுடன் வேலூர் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

பகல் சுமார் 11.30 மணியளவில் மாஜிஸ்திரேட்டு அலிசியா முன்பு முருகன் சமர்ப்பிக்கப்பட்டார். இதனையடுத்து வழக்கு விசாரணையை வருகிற 20-ஆம் தேதிக்கு மாஜிஸ்திரேட்டு ஒத்தி வைத்தார்.

பின்னர் முருகனை வேனில் மீண்டும் வேலூர் மத்திய சிறைக்கு காவலாளரக்ள் கொண்டுச் சென்றனர்.