அறிவித்தபடி விரைவில் அரசியல் கட்சி ஆரம்பிக்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு தி.மு.க தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி அட்வைஸ்  செய்துள்ளார்.  காவேரி மருத்துவமனைக்கு கலைஞர் உடல் நிலை குறித்து விசாரிக்கச் சென்ற ரஜினி அங்கு மு.க.அழகிரியை சந்தித்து பேசியது தான் நேற்று முன் தினம் டால்க் ஆஃப் த டவுன் ஆனது. அனைத்து தலைவர்களையும் போல் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்துவிட்டு ரஜினி திரும்பிவிடுவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனது நண்பரான அழகிரி எங்கே இருக்கிறார் என்று கேட்டு தேடிச் சென்று சந்தித்துள்ளார் ரஜினி. கலைஞர் மீண்டும் உடல் நலம் பெற்றது மற்றும் ரஜினி தன்னை தேடி வந்து சந்தித்தது போன்ற காரணங்களால் அழகிரி நேற்று முன் தினம் செம குஷியாகியுள்ளார். 

தன்னை தேடி வந்த ரஜினி ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே அழகிரி பேச ஆரம்பித்துள்ளார். முதலில் ரஜினியின் உடல் நலம் குறித்து அழகிரி கேட்டறிந்தார். அதற்கு பதில் அளித்த ரஜினி, கலைஞர் உடல் நிலை குறித்து சோகமாக பேசியுள்ளார். அதற்கு அதெல்லாம் ஒன்றும் இல்லை எங்க அப்பா சும்மா ஜம்முனு இருக்கார் என்கிற ரீதியில் அழகிரி பதில் சொல்லியுள்ளார். அதன் பிறகு தற்போது ரஜினி நடித்து வரும் கார்த்திக் சுப்பராஜ் படம் குறித்து பேச்சு திரும்பியுள்ளது. மேலும் காலா படத்தை தான் பார்த்ததாகவும் மிகவும் நன்றாக இருந்ததாகவும் அழகிரி ரஜினியுடம் கூறியுள்ளார். 

இதனை கேட்டு சிரித்த ரஜினி, அழகிரி மற்றும் அவரது குடும்பத்தினர் தற்போது என்ன செய்கின்றனர் என்று கேட்டறிந்து கொண்டார். பின்னர் புறப்பட தயாரான போது ரஜினியின் தோள் மேல் கையை போட்டுக் கொண்ட அழகிரி விரைவாக கட்சி ஆரம்பியுங்கள் என்று தெரிவித்துள்ளார். தற்போது அரசியல் சூழல் சிறப்பாக உள்ளது உங்களைப் போன்ற க்ளீன் இமேஜ் உள்ள ஒருவரை மக்கள் விரும்புவார்கள். காலம் கடத்தினால் நிலைமை மாற வாய்ப்புள்ளது. எனவே ஏற்கனவே அறிவித்தபடி கட்சியை துவங்கி வேலையை பாருங்கள், நாடாளுமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெல்ல முடியும் என்று ரஜினிக்கு அட்வைஸ் சொல்லியுள்ளார் அழகிரி. இதனை எல்லாம் பொறுமையாக கேட்டுக் கொண்ட ரஜினி ஒரே ஒரு புன்னகையை மட்டும் பதிலாக அளித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.