Asianet News TamilAsianet News Tamil

நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கேட்டு ரஜினி, கமல், விஜயகாந்த், டி.ஆர் ஆட்சியரிடம் மனு...

Rajini Kamal Vijayakanth and TR gave petiton to permission for dance shows
Rajini Kamal Vijayakanth and TR gave petiton to permission for dance shows
Author
First Published Jan 30, 2018, 10:58 AM IST


விழுப்புரம்

"நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்" என்று ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், டி.ராஜேந்தர், ரகுவரன், எம்ஜிஆர் ஆகிய நடிகர்கள் போன்று வேடமணிந்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் கலைஞர்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

கோயில் திருவிழா, பொதுக்கூட்டங்களில் நடன நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி.யிடம் கிராமிய கலைஞர்கள் மனு அளித்தனர்.

தமிழகத்தில் கோயில் திருவிழாக்கள், அரசியல் கட்சி பொதுக் கூட்டங்களில்  நடனக் கலைஞர்கள் மூலம் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவது வழக்கம்.

சில நிகழ்ச்சிகளில் அரைகுறை ஆடைகளுடன் இடம் பெறும் ஆபாச நடனங்களால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டதால் இதுபோன்ற மேடை நடனங்களுக்கு சில வருடங்களுக்கு முன்பு தடை விதிக்கப்பட்டது.

அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் இந்தத் தடை அமல்படுத்தப் பட்டதால், ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு காவலாளர்கள் அனுமதி மறுத்தனர். இதனால், கடந்த சில ஆண்டுகளாக நடனக் கலைஞர்கள் பிழைப்பின்றி தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மேடை நடனக் கலைஞர்கள் எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜயகாந்த், டி.ராஜேந்தர், ரகுவரன் உள்ளிட்டோர் போன்று வேடமணிந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஆகியோரை நேற்று சந்தித்து, "நடன நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலர் எம்.காதர்மொய்தீன், ஆலோசகர் பூபதி உள்ளிட்டோர் கூறியது:

"தமிழ்நாடு திரைப்பட மேடை நடனக் கலைஞர்களைப் பாதுகாக்கும் விதத்தில், சங்கத்தை நடத்தி வருகிறோம். பயிற்சி பெற்ற மேடை நடனக் கலைஞர்கள் மாநிலம் முழுவதும் சுமார் 3000 பேர் உள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 800 பேர் உள்ளனர். விழுப்புரம், சேலம் உள்பட பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

நடனக் குழுக்களுக்கு தொடர்பில்லாத சில இடைத் தரகர்கள் வெளிமாநில பெண்களை அழைத்து வந்து, ஆபாச கலை நிகழ்ச்சிகள் நடத்தியதால், முறையாக நடனக் கலை நிகழ்ச்சிகள் நடத்தி வரும் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அவர்களைப் பற்றி காவல் துறைக்கு தெரிவித்து தடுத்து வருகிறோம்.

ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே வரும் விழாக் காலங்களில் நடைபெறும் நடன நிகழ்ச்சியின் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டே எங்கள் குடும்பத்தை பாதுகாக்க வேண்டியுள்ளது.

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். பலரும் கூலி வேலைக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.

எங்கள் சங்கத்தில் அடையாள அட்டை பெற்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருவோர், எம்ஜிஆர் உள்ளிட்ட திரைப்பட நடிகர்களைப் போன்று வேடமிட்டு, தரமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

எங்களைப் போன்ற பதிவு பெற்ற சங்கத்தினரின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதியளிக்க வலியுறுத்தி வருகிறோம்"  என்று அவர்கள் தெரிவித்தனர்.

இந்த மனு குறித்து விழுப்புரம் காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, பொது இடங்களில் நடைபெறும் சில ஆபாச ஆடல், பாடல் நிகழ்ச்சிகளால் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை எழுந்ததால், நீதிமன்ற உத்தரவின் பேரில், இந்த நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், பிரச்சனையில்லாத, கிராமிய கலைக் குழுவினர் உள்ளிட்டோருக்கு அந்தந்த பகுதிகளில் காவலார்கள் அனுமதி அளித்து வருகின்றனர். மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளதால், இவர்களது கோரிக்கையும் பரீசிலனை செய்யப்படும் என்று தெரிவித்தனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios