ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடி வரும் வேளையில் நடிகர் ரஜினிகாந்த், தனது குடும்பத்தாருடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உள்ளார். ரஜினியின் ஹோலி கொண்டாட்ட புகைப்படம் தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஹோலி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. வட மாநில இந்து மக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு வண்ணமயமான பண்டிகை இது. பக்த பிரகலாதன் கதையுடன் ஹோலி பண்டிகை தொடர்புடையது. ஸ்ரீமன் நாராயணனின் நாமத்தை உச்சரித்த பக்த பிரகலாதனை கொல்வதற்காக தீயில் இறங்கிய ஹோலிகா என்ற அரக்கி தீயிலேயே மாண்டுபோனாள். பக்த பிரகலாதன், சாதாரணமாக எழுந்து வருவது போல் தீயில் இருந்து வெளியே வந்தார். 

இந்த நிகழ்வைக் குறிப்பிடும் வகையில் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைப் பூசியும், வண்ண நீரைப் பாய்ச்சியும், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், மற்றும் அவரது குடும்பத்தாருடன் ஹோலி கொண்டாடும் புகைப்படத்தை அவரது மகள் சௌந்தர்யா, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தின் 2-வது டீசர் நேற்று நள்ளிரவு வெளியானது. காலா படத்தின் 2-வது டீசரை ரசிகர்கள் கொண்டாடும் இந்த வேளையில், ரஜினி தன் குடும்பத்தாருடன் ஹோலி கொண்டாடிய புகைப்படம் வெளியாகி உள்ளது. ரஜினியின் ஹோலி கொண்டாட்ட புகைப்படத்தை அவரது ரசிகர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.