சிந்துபாத் கதைக்கே செம்ம டஃப் கொடுக்கிறார் மாஜி ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தினம் தினம் அவரைப் பற்றிய புதுப்புது பகீர் தகவல்களும் வந்துகொண்டே இருக்கின்றன
சிந்துபாத் கதைக்கே செம்ம டஃப் கொடுக்கிறார் மாஜி ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. தினம் தினம் அவரைப் பற்றிய புதுப்புது பகீர் தகவல்களும், குற்றச்சாட்டுகளும், முறைகேடு புகார்களும் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. சில நாட்களுக்கு முன் கர்நாடகா மாநிலத்தில் கைது செய்யப்பட்ட அவர், நிபந்தனை ஜாமீனில் விடப்பட்ட நிலையில், மீண்டும் அவரை புதிய வழக்கில் உள்ளே தள்ள முழு ஆயத்தமான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில்தான் அவர் பதவி வகித்த ஆவின் நிறுவனத்தின் பல மாவட்ட அலுவலகங்கள், பண்ணைகள் எல்லாம் நோண்டி நுங்கெடுக்கப்படுகின்றன.
அந்த வகையில் மதுரை ஆவின் நிறுவனத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் கடந்த 5 ஆண்டுகளில் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக தெரிகிறது. அது மட்டுமில்லாமல், ஆவினிலிருந்து பல கிலோ நெய் மற்றும் வெண்ணெய் அமைச்சரின் குடும்பம் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்களின் குடும்பத்துக்கும் கொடுக்கப்பட்டதாக கணக்கு எழுதி வைத்துள்ளனர். மேலும் சமீபத்திய துறை ரீதியான விசாரணையின் போதும் முழுக்க முழுக்க ராஜேந்திர பாலாஜி மீது பல குற்றச்சாட்டுகளை அள்ளித் தட்டியுள்ளனர் அதிகாரிகள். இதை எடுத்து வைத்துக் கொண்டுதான் ராஜேந்திர பாலாஜியை வளைக்க புதிய வழக்குகளுக்கு ஸ்கெட்ச் பண்ணிக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு.

இந்நிலையில், தான் அமைச்சராக இருந்தபோது தன்னால் பலனடைந்த அதிகாரிகள் இப்போது தன்னையே சிக்க விடுவதால் டென்ஷனாகியிருக்கும் ராஜேந்திர பாலாஜி, தனது ஆதரவாளர்கள் மற்றும் லீகல் தரப்பில் பேசிவிட்டு புதிய புகார் ஒன்றை கிளப்ப துவங்கியுள்ளார். அதில் “அமைச்சராக இருந்த என் வீட்டுக்கு நெய், வெண்ணெய் கொடுத்ததாக அதிகாரிகள் கணக்கு எழுதி இருக்கிறார்கள், இப்போது அப்படி சொல்கிறார்கள்! என்றால், அவர்களை ஏன் விசாரிக்கவில்லை தி.மு.க.வின் அரசு? அவர்களையும் விசாரணையில் இழுத்து விசாரிக்க வேண்டிதானே! அதிகாரிகள் யாருமே தப்பு செய்யவில்லை என்று அரசாங்கம் அவர்களை காப்பாற்ற நினைக்கிறதா. அல்லது அவர்களை காப்பாற்றுவதாக உறுதி கூறி, என் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்த சொல்லி வர்புறுத்துகிறார்களா. எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும்.” என்கிறார்.
மாஜியின் இந்த திடீர் போர்க்கொடியானது சிட்டிங் அதிகாரிகளுக்கு செம்ம சிக்கலை கிளப்பியுள்ளது.
ஓ…மை காட்!
