தமிழகத்தில் உள்ள ஆரோக்கியா, விஜய், டோல்டா பால் தரம் குறைந்தவை என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பாலில் கலப்படம் இருப்பதாக குற்றம்சாட்டிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,சில தனியார் நிறுவனங்களில் பாலை மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய உத்தரவிட்டிருந்தார்.

இதனை எதிர்த்து ஹட்சன் மற்றும் விஜய் ஆகிய பால் நிறுவனங்கள், ஆதாரம் இல்லாமல் தங்கள் நிறுவன பாலை பரிசோதிக்க அனுமதிக்கக் கூடாது என சென்ளை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தன. அரசின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும்  வலியுறுத்தியிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்  விசாரணைக்கு வந்ததது.

அப்போது ஹட்சன் மற்றும் விஜய் ஆகிய நிறுவனங்களின் பாலை மாதிரி எடுத்து பரிசோதிக்க 4 வாரங்களுக்கு தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் இது தொடர்பாக 4 வாரங்களுக்குள் உரிய பதில் அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில் மனுதாக்கல் செய்தார்.

அதில், பால் கலப்படம் குறித்த அனைத்து குற்றசாட்டுகளுக்கும் ஆதாரங்கள் உள்ளது எனவும், தெரிவித்திருந்தார்.  

அதன்படி இன்று தமிழகத்தில் உள்ள ஆரோக்கியா, விஜய், டோல்டா பால் தரம் குறைந்தவை என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.