நீலகிரியில் விடாமல் கொட்டித் தீர்த்த மழையால் கால்வாயில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. இதனால், விவசாயிகளும், மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு 52 சதவீதம் மட்டுமே பருவமழை பெய்தது. அதிலும், குறிப்பாக கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பருவமழை மிகவும் குறைந்தே பெய்தது. கடும் வெயிலும் அடித்தது.

குறைவான மழையின் காரணமாக மாவட்டத்தின் பெரும்பாலான அணைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டன. பெரிய பெரிய அணைகளில் கூட தண்ணீர் வற்றியே காணப்பட்டது. இதனால் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி போன்ற இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடியது.

இந்நிலையில் ஊட்டியில் கடந்த இரண்டு நாள்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சாரல் மழைபோல் சிறிது நேரம் மழை பெய்ததற்கே மக்கள் மகிழ்ச்சியுற்றனர். ஆனால், நேற்று காலை மக்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. ஊட்டியில் மேக மூட்டத்துடன் கடும் குளிராக ஆரம்பித்து, மதிய நேரத்தில் எல்லாம் மழை பெய்யத் தொடங்கிவிட்டது.

பின்னர் சுமார் 2.30 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு விடாமல் கொட்டித் தீர்த்தது. இந்த பலத்த மழை காரணமாக கமர்சியல் சாலை, சேரிங்கிராஸ், கூட்டசெட் சாலை உள்ளிட்ட இடங்களில் மழைநீர் ஆறாய் ஓடியது.

இந்த மழை காரணமாக விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நீர் நிலைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் அதிகரித்தது. ஊட்டி நகரின் பிராதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் மழைநீர் வெள்ளமாக ஓடியது.

இதே போல் கூடலூர் பகுதியில் பருவமழை போதியளவு பெய்யாததால் முன்கூட்டியே கோடை வறட்சி தலைதூக்கிற்று. இதன் தாக்கத்தால் நீர்நிலைகள் வறண்டு கிடக்கிறது.

மேலும், விவசாயமும் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளாததால் நிலத்தின் ஈரத்தன்மையும் குறைந்துவிட்டது. இதனால், தேயிலை செடிகளில் விளைச்சல் குறைந்தது. மேலும், செடிகளும் கருகத் தொடங்கின.

இதேபோல் அந்நிய செலாவணியை ஈட்ட முடியாத அளவுக்கு குறுமிளகு விளைச்சலும் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

கூடலூர் தொரப்பள்ளி, புத்தூர்வயல், பாடந்தொரை, தேவர்சோலை, முதுமலை ஊராட்சி உள்ளிட்ட பகுதியில் நெல் விளைச்சலும் போதிய தண்ணீர் இல்லாததால் பாதிக்கப்பட்டது. இதனிடையே நீர்நிலைகள் தண்ணீர் இல்லாததால் குடிநீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.

கோடை மழை பெய்ய வேண்டும் என மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மக்களின் எதிர்ப்பார்ப்பிற்கு ஏற்றது போலவே கூடலூர், தேவர்சோலை, முதுமலை உள்ளிட்ட பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த கால நிலைக்கு கூடலூர் பகுதி மாறியது. மேலும் தண்ணீர் இன்றி காய்ந்து கிடந்த தேயிலை தோட்டங்களில் பசுமை திரும்பியுள்ளது. இந்த மழையால் தேயிலை செடிகள் புத்துணர்வு பெற்றுள்ளது. இதனால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.