வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் இன்றும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்தது. காஞ்சிபுரம், செவிலிமேடு, வாலாஜாபாத், உத்திரமேரூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. திருப்போரூர், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் 3 மணிநேரம் விடாமல் பெய்த தொடர் மழையால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடானது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

சிவகாசியில் 13 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூரில் தலா 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது வானிலை ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் வங்க கடலின் மத்திய மற்றும் வடக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று நிலவி வருகிறது. இது படிப்படியாக வரும் 18ம் தேதிக்குள் வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதை பொறுத்து தமிழகத்தில் 18ம் தேதிக்கு பிறகு அடுத்து வரும் நாட்களில் மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.