தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யுறது நல்லாட்சிக்கான அடையாளம் என மக்கள் நினைப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நெல் கொள்முதல் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி பொய் செல்வதாவும் அவர் குற்றம்சாட்டினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசியில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். பின்பு பேசிய அவர் எதிக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விளாசினார். இது தொடர்பாக பேசிய முதல்வர் ஸ்டாலின், ''மக்களை மகிழ்க்கவும், மக்களை காக்கவும் தான் இந்த ஆட்சி. இதனால் தான் மக்கள் எங்களுடன் இருக்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சம்
இதை பொறுக்க முடியாமல் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விரக்தியில் உச்சத்தில் பேசுகிறார். தமிழகத்தில் பரவலாக மழை பெய்கிறது. தொடர்ந்து நல்ல மழை பெய்யுறது நல்லாட்சிக்கான அடையாளம் என்று மக்கள் போற்றி வருகின்றனர். ஆனால் இதை வைத்தும் பழனிசாமி அரசியல் செய்கிறார். விளைச்சல் இல்லை; அது அழுகி விட்டதாக சொல்கிறார். விவாசாயிகள் பாடுபட்டு உற்பத்தி செய்த ஒரு நெல் மணி கூட வீணாகக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
அதிமுகவை விட அதிக நெல் கொள்முதல்
அந்த அடிப்படையில் கடந்த 4 ஆண்டுகளில் முந்தையை ஆட்சிக் காலத்தை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 48 லட்சத்து 61 ஆயிரத்து 386 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதிமுக ஆட்சியில் ஆண்டுக்கு 28 லட்சத்து 70 ஆயிரத்து 293 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டன. இந்த அடிப்படை கூட தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பொய் சொல்லி வருகிறார். அவரிடம் இருந்து பொய் துரோகத்தை தவிர வேறு எதுவும் எதிர்பார்க்க முடியாது.
விவசாயிகளை புரோக்கர் என்று கூறிய இபிஎஸ்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தான் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இதற்கு எதிராக விவசாயிகள் இரண்டு ஆண்டு காலம் போராடினார்கள்.அப்போது எடப்பாடி பழனிசாமி விவசாயிகளை புரோக்கர் என்று கொச்சைப்படுத்தி பேசினார். ஆனால் திமுக ஆட்சி அமைந்தவுடன் சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தவன் தான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
வடகிழக்கு பருவமழையில் மக்களை காத்தோம்
வடகிழக்கு பருவ மழையால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக அரசு துரிதமாக செயல்பட்டது. வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு தேவையான உதவிகள் வழங்கப்பட்டன. சென்னையில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு உணவுகள் வழங்கப்பட்டன'' என்று தெரிவித்தார்.
