Asianet News TamilAsianet News Tamil

அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்குமாம்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

rain likely to be on next two days will hit tamilnadu said balachandran
rain likely to be on next two days will hit tamilnadu said balachandran
Author
First Published Oct 18, 2017, 9:50 AM IST


தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழை இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசியபோது,  தமிழகத்துக்கு அதிக மழைப்பொழிவைத் தரும் வடகிழக்குப் பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு மேல் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது என்று கூறினார்.

மேலும், வங்கக்கடலில் தற்போது நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வலுவிழந்து பின்பு, அக்டோபர் 25ஆம் தேதி கிழக்குத் திசையில் இருந்து காற்று வீசும் சூழல் தென்படுகிறது. எனவே, வரும் 25ஆம் தேதிக்குப் பிறகு வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புள்ளது என்றார்.

மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி சற்று வலுப்பெற்று அதே இடத்தில் நீடித்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி வடமேற்கு திசை நோக்கி நகரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். சென்னையைப் பொருத்தவரை, நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்... என்று  கூறினார். 

செவ்வாய்க்கிழமை நேற்று, பூண்டி, வந்தவாசி ஆகிய இடங்களில் 50 மி.மீ., காஞ்சிபுரத்தில் 40 மி.மீ., உத்தரமேரூர், செய்யாறு, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, தாமரைப்பாக்கம் ஆகிய இடங்களில் 30மி.மீ., சென்னை நுங்கம்பாக்கம், ராமநாதபுரம், மதுராந்தகம், திண்டிவனம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 20 மி.மீ., விழுப்புரம், கேளம்பாக்கம், தாம்பரம், திருவண்ணாமலை, செம்பரம்பாக்கம், மகாபலிபுரம்  ஆகிய இடங்களில் 10மி.மீ., மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios