Asianet News TamilAsianet News Tamil

இந்த மழையே தாங்கலியே... இன்னும் 3 நாட்களுக்கு கனமழைதான்... கதி கலக்கும் அறிவிப்பு!

rain likely to be on next three days will hit tamilnadu said balachandran
rain likely to be on next three days will hit tamilnadu said balachandran
Author
First Published Nov 1, 2017, 6:12 PM IST



சென்னையில் கடந்த 3 நாட்களாகப் பெய்த கன மழையையே தாங்க இயலாமல் பொது மக்கள் பெரும் சிரமத்தைச் சந்தித்தனர். நகரின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து நாசம் செய்து விட்ட நிலையில், மேலும் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் இன்று அறிவித்தது. மழைக் காலத்தை எதிர்கொள்ளப் போதுமான நடவடிக்கைகள் இல்லாததால், வெள்ள நீரால் சூழப்பட்டு ஏற்கெனவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களை கதி கலக்குவதாக அமைந்துள்ளது இந்த அறிவிப்பு. 

சென்னையின் இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலசந்திரன், நவ.4ம் தேதி மிக கனத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறினார். 

மேலடுக்கு சுழற்சி காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் மிக கன மழையும், சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அவர் கூறினார்.  கடலோர தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நவ.4ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என்றார். 

இன்று காலையுடன் முடிந்த அளவில், பொன்னேரியில் 10 செமீ., மழை பதிவானதாகக் கூறிய பாலசந்திரன்,  நேற்று இலங்கை பகுதியில் நிலை கொண்டிருந்த மேலடுக்குச் சுழற்சி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கிறது என்றும், இதன் காரணத்தால், கடலோர மாவட்டங்களிலும் தென் தமிழகத்தின் உட்பகுதியிலும் மழை பெய்யும் என்றும் கூறினார். 

கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை, மிக கன மழையும்,  வடதமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள் தவிர மற்ற இடங்களில் மழை மற்றும் கன மழையும் இருக்கும் என்றும் கூறினார்.  சென்னை, காஞ்சிபுரம்,  திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில், இடைவெளி விட்டு அவ்வப்போது கன மழை பெய்யும்  என்று கூறினார் பாலசந்திரன். 

சென்னையில் இன்று காலை தாம்பரம், எழும்பூர், சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. மேலும், சென்னையின் புறநகர்ப் பகுதிகளான, தாம்பரத்தை அடுத்த வண்டலூர், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. 

செம்பரம்பாக்கம் ஏரி நீர்மட்டம் 2 நாளில் 3 அடி உயர்ந்தது. சோழவரத்தில் 6 செ.மீ, திருப்போரூரில் 5 செ.மீ, அண்ணா பல்கலைக்கழகம் பகுதியில் 4 செ.மீ. மழைப் பெய்தது. 

தொடர் மழை காரணமாக ஈச்சங்காடு அண்ணா நகர் பகுதியில் உள்ள தரைப்பாலம் உடைந்தது. இதனால் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஈச்சங்காடு, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகும் நிலை உருவாகியுள்ளது. 

திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் நூற்றுக்கணக்கான ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் முழ்கின. நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 7 செ.மீ., மழை பதிவானது. சீர்காழியில் 5 செ.மீ. மழை பதிவானது. நாகப்பட்டினத்தில் கடல் சீற்றம் காரணமாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 

Follow Us:
Download App:
  • android
  • ios