தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை சரிவர பெய்யாத நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இக்காலங்களில் பெய்யும் மழைநீரை குடிநீர் தேவைக்கும், விவசாயிகள் சாகுபடிக்‍கும் பயன்படுகிறது. ஆனால் பருவநிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்ட காரணங்களால் சில வருடங்களாக பருவமழை பொய்த்து வருகிறது. காவிரியிலும் சரிவர தண்ணீர் வராததால் மூன்று போகம் சாகுபடி செய்யும் விவசாயிகள் பருவமழையை நம்பி ஒரு போகம் நெல் சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர். இருந்தும் பருவமழை சரிவர பெய்யவில்லை. 

இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகில் நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தற்போது தெற்கு நோக்கி நகர்ந்துள்ளது. அதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.